search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி நேரத்தில் மைதானத்தை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும்- ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி
    X

    கடைசி நேரத்தில் மைதானத்தை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும்- ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி

    • ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
    • எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது.

    லக்னோ:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 100 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் சான்ட்னெர் அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் (அவுட் இல்லை), இஷான் கிஷன் 19 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்த பிட்ச் மிகுந்த அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஆட்டத்தை முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்ட னர். 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல.

    கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும். 120 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    Next Story
    ×