search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை வெளியீடு - மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?
    X

    3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை வெளியீடு - மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

    • மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 9 அணிகள் பங்கேற்கின்றன.

    துபாய்:

    மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் 3 தொடர், வெளிநாட்டில் 3 தொடர் என்ற அடிப்படையில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. மொத்தம் 27 தொடர்களில் 68 டெஸ்டுகள் இதில் அடக்கம்.

    2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெறும் இந்த தொடரின் முடிவில் யார் அதிக புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.

    இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கான தொடரில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி மொத்தம் 19 டெஸ்டுகளில் விளையாடுகிறது. உள்ளூர் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், அந்நிய மண்ணில் வெஸ்ட் இண்டீசை எளிதாக வென்றுவிடலாம். ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி வீழ்த்தினாலோ, டிரா செய்தாலோ அடுத்த முறையும் இந்தியா பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை எதிர்கொள்ளும்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளையும், அந்நிய மண்ணில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளை வெளிநாடுகளிலும் எதிர்கொள்ள இருக்கிறது.

    இலங்கை அணியை பொறுத்தவரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சொந்த மண்ணிலும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகளை வெளிநாட்டு மண்ணிலும் எதிர்கொள்ள உள்ளது.

    Next Story
    ×