என் மலர்
முக்கிய விரதங்கள்
பொட்டல் குளம் அய்யன்மலை ஐயப்பசாமி கோவிலில் நாளை விரதம் தொடங்கும் பக்தர்கள்
- குமரியின் சபரிமலையாக இந்த கோவில் திகழ்கிறது.
- கார்த்திகை 1-ந்தேதி முதல் தை 1-ந்தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியன்று (நாளை) விரதத்தை தொடங்குவது வழக்கம். இதற்காக ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.
அதே சமயம் குமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த பொட்டல்குளம் பகுதியில் உள்ள அய்யன்மலை ஐயப்பசாமி கோவில் தமிழக அளவில் புகழ் பெற்றது ஆகும். இது குமரியின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மருந்துவாழ் மலைக்கு மிக அருகில் உள்ளது.
இந்த கோவிலிலும் நாளை (வியாழக்கிழமை) ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர்.
இந்த கோவிலை பொட்டல் குளத்தை சேர்ந்த தியாகராஜ சுவாமிகள் என்ற சித்தர் நிறுவினார். இவர் பனை ஓலையில் ஐயப்பசாமி குறித்து பல பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர். இவர் சபரிமலை ஐயப்பசாமி கோவிலுக்கு சென்ற போது, நம் பகுதியிலும், இது போன்று ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று எண்ணியபடி தூங்கினார். அப்போது அவர் கனவில் ஐயப்பசாமி தோன்றி, அதற்கான இடத்தையும் காட்டினார். அதைத்தொடர்ந்து பொட்டல்குளத்தில் அய்யன்மலை குபேரன் ஐயப்பசாமி கோவிலை நிறுவினார்.
இந்த மலைக்கு பாதை அமைக்க ஊரில் உள்ளவர்கள் பலரும் உதவினர். அதைத்தொடர்ந்து மலை உச்சியில் 18 படிகளுடன் 1983-ம் ஆண்டு ஐயப்பசாமி கோவில் கட்டப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டனர். அப்போது அவர்கள் குமரியின் சபரிமலையாக இந்த கோவில் திகழ்கிறது என்று கூறினார்கள்.
மேலும், சபரிமலைக்கு செல்ல முடியாத எங்கள் ஏக்கத்தை இந்த கோவில் தீர்த்தது என்றும் தெரிவித்தனர். தற்போது ஏராளமான பக்தர்கள் நேரடியாகவே இங்கு வந்து ஐயப்பசாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை செய்து வழிபடுகிறார்கள். இந்த மலையில் இருந்து சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காணலாம். தினமும் கோவிலுக்கு மேலே கருடன் வட்டமிட்டு செல்வதும் கோவிலின் சிறப்பாகும்.
மலையின் அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 108 படிகள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க தியான மண்டபமும் உள்ளது. கோவிலில் அனைத்து சனிக்கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஐயப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தமிழ் மாதங்களில் ஒன்றாம் தேதி முதல் 5-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
கார்த்திகை 1-ந்தேதி முதல் தை 1-ந் தேதி வரை ஐயப்ப பக்தர்களுக்காகவே சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த கோவிலின் நிர்வாகி சித்தர் தியாகராஜ சுவாமிகள் தினசரிஐயப்ப சாமிக்கு பூஜைகள் நடத்தி வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்தது நிறைவேறி வருகிறது என்றும் கூறுகிறார்கள்.