என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
ஆயா கோவில் என்கிற பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் திருக்கோவில்
- இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே.
- கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டும் இருக்கும்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டிபுதூரில் இருக்கிறது ஆயா கோவில் என்று பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் திருக்கோவில். மூன்று வாயில்கள் கொண்ட கோவிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாயில் திறக்கப்படுகிறது. வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாசலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. முன் மண்டபத்தை ஒட்டியுள்ள ஊஞ்சலில் திருவிழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் வைத்து, பாட்டுப்பாடி வழிபடுவது வழக்கமாக உள்ளது. ''இலங்கை அதிபதி ராவணனின் சகோதரியான சூர்ப்பனகை தான், அழியா இலங்கையம்மன் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார். சீதையைத்தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற சூர்ப்பனகை தடுத்தாள்.
அனுமன் தன் வாலினால் அவளை கட்டி சுருட்டி வீச, புதர்மண்டிய வனப்பகுதியான இந்தப்பகுதியில் தலைகீழாக வந்து விழுந்தாள். அந்த சூர்ப்பனகையை அழியாஇலங்கை அம்மனாக மக்கள் வழிபடுகின்றனர்,'' என்பது தலவரலாறு. இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே. கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டும் இருக்கும். ராம, லட்சுமணர்களால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் தலை விழுந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் உடல் இல்லாத தலை மட்டுமே உள்ளது. இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறார் என்பது பெயர்க்காரணம். பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மனின் தமக்கையாகவும் அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். இதனால் அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாக தெய்வங்களுக்கும் தனிச்சன்னதி உள்ளது.
மேலும் தனிக்கட்டிடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் 27 குழந்தைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களை 27 நட்சத்திரங்களாக பக்தர்கள் வழிபடுகின்றனர். மற்றொரு புறத்தில் நாகர் சிற்பங்கள் உள்ளன. இதற்கு அருகிலுள்ள பாம்பு புற்றில், பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகின்றனர். இப்படி வழிபடுவதால் பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய் நொடிகள் தீரவும், தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் பக்தர்கள் திரண்டு வந்து அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும் போது சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து கோவிலில் வைத்துச் செல்கின்றனர். நாய், பாம்பு உருவங்களையும் சமர்ப்பிக்கின்றனர். அதோடு கோவிலை 3 முறை வலம் வந்து, அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை இரவு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவிழா நடக்கிறது. இதில், வேண்டுதலை நிறைவேற்ற வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர், ஆடுகளை பலியிட்டு விருந்து அளிப்பர்.
திருவிழாவை ஒட்டி, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் கூனவேலம்பட்டி, கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம், தோனமேடு, ஆனைகட்டி பாளையம், குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் பொங்கல் வைப்பவர்கள் குடும்பத்திலும், வெளியூர்களில் இருந்து பொங்கல் வைக்க வருபவர்களின் குடும்பத்திலும், சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்த மாட்டார்கள்.
வீட்டில் அரிசி சோறு சாப்பிட மாட்டார்கள். கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்றவற்றால் சமைக்கப்பட்ட உணவு வகைகளை தான் சாப்பிடுவர். மேலும் பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி கொள்வர். கட்டிலில் படுத்து உறங்க மாட்டார்கள். திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கிராம மக்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து கம்பு, கேழ்வரகு போன்ற உணவு வகைகளை சாப்பிட தொடங்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்