search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அதியமான் கோட்டை கால பைரவர் கோவில்- தருமபுரி
    X

    அதியமான் கோட்டை கால பைரவர் கோவில்- தருமபுரி

    • இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன.
    • 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன. முதல் கோவில் காசியில் உள்ள தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) என்றழைக்கப்படும் கோவில். அதற்கு அடுத்தது தருமபுரி கால பைரவர் கோவில். தருமபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அருகிலேயே கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். மேலும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்கள் இங்கு அதிகமாக வருகின்றனர். சில பக்தர்கள் மலேசியாவில் இருந்தும் வருகை தருகின்றனர்.

    மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் தருமபுரி பைரவர் கோவிலில் வீற்றிருக்கிறார் என்று ஆன்மீக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் விரதம் இருப்பது மிக சிறப்பானது.

    பைரவர் தோன்றிய வரலாறு

    அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும் படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள் மயமாக்கி ஆட்சி செய்தான்.

    தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களின் கருணையால் அந்தகாசுரன் அழிந்தான். இதுவே பைரவர் அவதரித்த நோக்கம். ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது.

    போரில் வென்ற மன்னன்

    9-ம் நூற்றாண்டில் நிறைய இந்து கோவில்கள் அப்போது ஆட்சி புரிந்தவர்களால் இடிக்கப்பட்டன. அப்பொழுது இப்பகுதியை ஆண்ட அதியமான் மன்னரால் எதிரிகளை வெல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கால பைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர்.

    மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்றும் ஜோதிடர்கள் கூறினர். அவர்கள் சொன்னதற்கு இணங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார். இந்த கோவிலை கட்டிய பிறகு அதியமான் மன்னர் போர்களில் வென்றார் என்கிறது வரலாறு. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.

    இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

    மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார்.

    இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    Next Story
    ×