search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில்
    X

    பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில்

    • இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.
    • விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    கி.பி. 1825-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின், அமைச்சர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆதலால் சிகிச்சைக்காக திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரச பரிவாரங்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில்

    தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையாருக்கு சங்கரன்கள் 2 பேர் பூஜை செய்வதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார். உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்கு உள்ள நோயை பற்றி சங்கரன்களிடம் கூறினார்.

    உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்றனர். அவர்கள் கூறிய படி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில் குளத்தில் குளித்து விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் இதுகுறித்து அமைச்சர், துளசேந்திர மகாராஜாவிடம் கூறினார். உடனே மகாராஜா, நீலகண்டப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தை தானமாக கோவிலுக்கு எழுதி வைத்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து நீலகண்டப்பிள்ளையார், துளசேந்திர மகாராஜாவின் கனவில் தோன்றி தனக்கு பூந்தோட்டம், பழத்தோட்டம் வேண்டும் என கேட்டதாகவும், ஆதலால் பேராவூரணி ரெயில்நிலையத்தின் அருகில் உள்ள செங்கொல்லை எனப்படும் நிலத்தினை தானமாக எழுதிக்கொடுத்ததாகவும் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சிறிய கூரைக்கொட்டகையில் இருந்த நீலகண்டப்பிள்ளையாருக்கு சிறிய கோவிலையும் அவர் கட்டி கொடுத்தார்.

    தலவிருட்சம் துளசேந்திர மகாராஜாவால் சிறிய கோவிலாக அமையப்பெற்ற இந்த கோவில் பின்னர் பலரின் முயற்சியால் சிறிது, சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு விமானம், சிறிய ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு உபயதாரர்கள் மூலம் 2 பெரிய முன்மண்டபங்களுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பெரிய கோவிலாக அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்கு வடக்கு புறத்தில் தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் நீராடி, நீல கண்டப்பிள்ளையாரை வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம். ஆதலால் இந்த பிள்ளையாருக்கு "தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப்பிள்ளையார்" என்ற சிறப்பு பெயரும் உண்டு.

    பல்லி சொல்

    இக்கோவிலில் சில பக்தர்கள் திருமண பொருத்தம் மற்றும் சில நல்ல காரியங்களுக்கு விடியற்காலையில் கவுளி (பல்லி சொல்) கேட்பதற்காகவே வந்து செல்வார்கள். கிழக்கு நோக்கிய இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.

    கோவிலின் பின்புறம் தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்து கம்பீரமாக காட்சி தருகிறது. காரியங்களில் தடை ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.

    விநாயகருக்கு அமைந்த தனி கோவில்களில் இது முக்கியமானது. முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன.

    பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழங்தைக்காவது நீலகண்டன், நீலவேந்தன், நீலா, நீலவேணி என்று முதல் எழுத்து நீ என பிள்ளையாரை நினைத்து பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும் பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் கோவில் மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் திருக்குளத்தில் நீராடி நீலகண்ட பிள்ளையாரை வழிபடுபவர்கள்.

    Next Story
    ×