search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சபரிமலையில் சரண் அடைவோம்
    X

    சபரிமலையில் சரண் அடைவோம்

    • இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.
    • பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.

    ஐயப்பனை கண்கண்ட தெய்வமாக நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வத்தைப் பற்றி 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

    ஐயப்பன் புகழை பாமர மக்களும் உணரும்படி செய்த பெருமை "ஐயப்பன்" நாடகம் நடத்திய நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கத்தையே சேரும். இந்நாடகம் மூலம் மக்களை அவர் பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தார். இவர் 1400 தடவை ஐயப்பன் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்.

    1942 முதல் 1946 வரை நவாபின் நாடகக் கம்பெனியாக மதுரை தேவி பால வினோத சங்கீத சபையினர் கேரளாவில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அப்போது கார்த்திகை பிறந்து விட்டால் 'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் காதைத் துளைக்கும். செண்டை வாத்தியங்களில் ஒலி காது செவிடுபடும். இது என்னக் கத்தல், இது என்ன வாத்தியம் என்றே நவாபும் அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்து வந்தார்களாம்.

    நாடகக் கம்பெனி கோட்டயத்தில் முகாமிட்டபோது ஐயப்ப சாமி என்ற பெரியவர் நவாபிடம் வந்து 'ஐயா! நான் நாகர்கோவிலில் இருந்து வருகின்றேன். நீங்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொன்றும் தெய்வ காவியமாக இருக்கிறது. உங்களுக்கு தெய்வ ஆதரவு இருக்கிறது. ஆகவே கலியுக வரதனாக விளங்கும் ஐயப்பன் சரித்திரத்தையும், நாடகமாக நடத்த வேண்டும். இது மலையாளத்தில் நடந்த உண்மைக் கதை என்றார்.

    நவாப் - "புதிய நாடகம் என்றால் அதிக பொருட் செலவாகும். மேலும் இது மலையாளக் கதை. தமிழ்நாட்டில் எடுபடுமா என்பதையும் பார்க்க வேண்டும்". என்று கூறி விட்டார்.

    அப்பெரியவர், "நீங்கள் நாடகம் நடத்தாவிட்டால் பரவாயில்லை. நான் ஐயப்பன் கதையை கதாகாலட்சேபமாக நடத்தி வருகிறேன். அதை நீங்கள் வந்து கேட்க வேண்டும்" என்று வற்புறுத்தினார்.

    நவாப் தாங்கள் முகாமிட்டிருந்த கம்பெனி வீட்டிலேயே அவர் கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்தார். கதையைக் கேட்டு ராஜமாணிக்கம் உருகி விட்டார். பந்தள அரசனின் மகனாக வளர்ந்து பனிரெண்டே ஆண்டுகள் மானிட உருவில் வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பன் சரிதம் எல்லோருடைய உள்ளத்தையும் உலுக்கி விட்டது. ராஜமாணிக்கம் அன்று முதல் ஐயப்பனுக்கு அடிமையானார்.

    என்ன ஆனாலும் இதை நாடகமாகவே நடத்தியாக வேண்டும். கதை எங்கு நடந்திருந்தாலும் அதிலுள்ள நீதி மனித சமுதாயத்திற்கே இன்றியமையாதது. இப்ேபர்ப்பட்ட ஒரு அருள் தெய்வத்தின் கதையை நடத்தி உலக மக்கள் அறிய செய்கிறேன் என்று ராஜமாணிக்கம் உறுதி பூண்டார்.

    1944-ம் ஆண்டு ஆலப்புழையில் ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மக்கள் ஏராளமாக வந்து நாடகத்தைப் பார்த்து பரவசமானார்கள். சபரிமலையே பார்த்தறியாத ஏராளமான பேர் நாடகத்தைப் பார்த்தபின் மலைக்குச் சென்று ஐயப்பனை நேரில் தரிசித்தனர்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐயப்பன் நாடகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது. மதுரையில் இந்த நாடகம் நடந்த போது அந்த நகரை இந்நாடகம் ஒரு கலக்கு கலக்கி விட்டது.

    இப்படித்தான் தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தி மக்களிடம் மெல்ல, மெல்ல பரவியது. இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.

    கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் கோவில் காணப்படுகிறது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் பழமையான ஆலயங்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் சிதிலம் அடைந்த பகுதிகளை காணலாம்.

    ஆண்டு தோறும் சுமார் 5 கோடி முதல் 7 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உச்சரித்து, அதாவது ஐயப்பன் திருவடிகளை சரண் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

    10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களால் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும், மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    பரசுராமர் செய்த பிரதிஷ்டை

    சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் பரசுராமர் என்றொரு கருத்து உண்டு. ஆனால் பரசுராமரின் காலத்தை திரேதா யுகம் என்று இதிகாசம் மூலம் அறிகின்றோம். ஒரு வேளை சாஸ்தாவின் அம்சமாக கேரளத்தில் அவதரித்த ஸ்ரீமணிகண்டன், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும் ஆன்றோர்களின் கருத்து.

    பாண்டிய வம்சத்து பந்தள மன்னர்கள்

    பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரது மந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையில் இருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903- ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுப்படுத்தினர்.

    Next Story
    ×