search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் முதல் முறையாக 7 மணி நேரம் நடந்த கருட சேவை: பக்தர்கள் மகிழ்ச்சி
    X

    திருப்பதியில் முதல் முறையாக 7 மணி நேரம் நடந்த கருட சேவை: பக்தர்கள் மகிழ்ச்சி

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.
    • நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் உற்சவங்களில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கருட சேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் கருட சேவை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதற்காக திருப்பதி மலையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தங்க வைர நகை அலங்காரத்துடன் ஏழுமலையான் எழுந்தருளினார். 4 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு இருந்தனர்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். முதலில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் மாட வீதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமம் இன்றி கருட சேவையை தரிசனம் செய்தனர். கருட சேவை முதல் முறையாக நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால் மனமுருக ஏழுமலையானை தரிசித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 4 லட்சம் இளநீர் பாட்டில்கள், 3 லட்சம் மோர் பாட்டில்கள் மற்றும் 3 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 82,043 பேர் தரிசனம் செய்தனர். 30,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×