என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 22-ந் தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும், இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறி இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரராக அருள்பாலிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.
தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.
இக்கோவில் எம பயம் போக்கி ஆயுள் விருத்தி அருளும் தலமாகும். 59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கட்டளை தம்பிரான்கள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கணேச குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவில் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்