search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சங்கரன்கோவிலில் இன்று மாலை ஆடித்தபசு காட்சி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
    X

    சங்கரன்கோவிலில் இன்று மாலை ஆடித்தபசு காட்சி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    • கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
    • 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

    மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.

    இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.

    தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×