search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன?
    X

    ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன?

    • ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள்.
    • நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

    ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவன் கோவில்களில் முதன்மையான கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.

    சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து, விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. நடராஜர் கோவிலில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும், தேரோட்டத்தையும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிவார்கள்.

    நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா.

    பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசியில் அக்னி நட்சத்திர தருணம் எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் தொடக்கி வைத்தவர் யார் தெரியுமா? யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி. சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த 2 பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.

    Next Story
    ×