என் மலர்
வழிபாடு
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தெப்பத்தேரோட்டம்
- தென்காசி வாசுதேவநல்லூரில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவில்.
- இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவில் உள்ளது. சிவபெருமான் உமையொரு பாகனாக உருவம் தரித்து பக்தர்களுக்கு அருள் வழங்கும் ஸ்தலங்கள் தமிழகத்தில் இரண்டு உள்ளது. அந்த திருத்தலங்களுள் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒன்றாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனித்திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான கடந்த 11-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
10-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் வீதி உலா நடந்தது. மாலை சப்தாவரணம் மண்டகப்படிதாரரான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் அர்த்தநாரீஸ்வரர் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு தெப்பத்தில் நாடார் உறவின்முறை சார்பில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மையப்பன் எழுந்தருளி நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து தேரோட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எஸ்.டி.கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன், நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா இராமேஸ்வரன், கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், மகாத்மா காந்தி சேவா சங்க தலைவர் கு.தவமணி, அனைத்து சமுதாய மண்டகபடிதாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.