என் மலர்
வழிபாடு
தஞ்சை பெரியகோவிலில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்: பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
- தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
- பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்திபெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூரம், ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி பெருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த நிலையில் நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில், பால், மஞ்சள், இளநீர், கரும்புசாறு, நெய், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், உலகம் அமைதி பெற வேண்டியும், நீர், நிலவளம் பெருக வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சிறப்பு அபிஷேக தீபாராதனை காண்பிக்கப்பட்டன. அத்துடன், நுாற்றுக்கணக்கான வளையல்களை கொண்டு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர்.