search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    X

    கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.
    • 19-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப்பட்டது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.

    நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது. இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.

    பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

    இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×