search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
    X

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

    • 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
    • தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×