search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்பங்களை அள்ளி வழங்கும் இந்திரபிரசாதவல்லி
    X

    இன்பங்களை அள்ளி வழங்கும் இந்திரபிரசாதவல்லி

    • மனக்கவலையின்றி வாழ்ந்திட, இறை வழிபாடே சிறந்த வழியாகும்.
    • சகல சவுபாக்கியங்களையும் அருளும் தலமாக திகழ்கிறது.

    கோவில் முகப்புத் தோற்றம்

    இவ்வுலகில் வாழ்பவர்களுக்கு தினமும் எண்ணற்ற கவலைகள் வந்து போகின்றன. அவற்றுள் சில நிலையாக இருந்து நம்மை வாட்டுகின்றன. நாம் அனுபவிக்கும் நன்மை - தீமைகள் யாவும் முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக அமைகின்றன.

    நமது வினைகளைப் போக்கி, மனக்கவலையின்றி வாழ்ந்திட, இறை வழிபாடே சிறந்த வழியாகும். அந்த வகையில் நமது குறைகளை போக்கி, சகல சவுபாக்கியங்களையும் அருளும் தலமாக திகழ்கிறது, மருதாடு திருத்தலம்.

    எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் அல்லவா? சொர்க்கத்தின் அதிபதியாக விளங்கும் தேவலோக தலைவன் இந்திரனுக்கு, அப்படி ஒரு பாக்கியமற்ற நிலை ஒரு சமயம் உண்டானது. கேட்டதைத் தரும் காமதேனு, கற்பக விருட்சம், அரம்பையர்கள் என அனேக சுகங்களைப் பெற்ற இந்திரனுக்கு, திடீரென ஒரு இனம் புரியாத அச்சம் தொற்றிக் கொண்டது. அனைத்து சுகங்களும் அவனைத் தீயாய் சுட்டது. மனம் வாடினான். உடல் மெலிந்தான். அதைக் கண்டு இந்திரனின் மனைவி இந்திராணி மிகவும் வருந்தினாள்.

    ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அசுரப் படைத் தலைவனான விருத்திராசுரனை அழிக்க முடியாமல் இந்திரன் திணறினான். அவனை அழிக்கும் வழியை கேட்டு சிவபெருமானை வணங்கி நின்றான். விருத்திராசுரனை அழிக்கும் ஆயுதம், ததீசி முனிவர்தான் என்று உரைத்தார், சிவபெருமான்.

    சிவபெருமானின் உத்தரவின்படி, ததீசி முனிவர் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது வஜ்ஜிர தேகத்தில் இருந்து முதுகெலும்பை எடுத்து, அதில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே இந்திரன் கையில் இருக்கும் வஜ்ஜிராயுதம். அந்த ஆயுதத்தால்தான், விருத்திராசுரனை அழிக்க முடிந்தது. போரில் தேவர்கள் பெரும் வெற்றியைப் பெற்று விட்டனர். ஆனால் அதன்பின்னர்தான், இந்திரன் மனம் வருத்தத்தில் தோய்ந்து போனது. ததீசி முனிவரின் இறப்பு பிரம்மஹத்தி தோஷமாக மாறி, இந்திரனை வாட்டியது.

    மிகுந்த கலக்கமுற்ற இந்திரன், நாரதரின் உதவியை நாடினான். நாரத மகரிஷியோ, 'பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட, பூவுலகில் சிவபூஜை செய்வதே சிறந்த வழி' என்று கூறினார்.

    அதன்படி இந்திராணியுடன் பூவுலகம் வந்த தேவேந்திரன், கங்கையில் நீராடி முதலில் விஸ்வேஸ்வரரை வணங்கினான். அப்படியே பல சிவன் ஆலயங்களை வழிபட்டபடியே, பாலாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். காஞ்சியில் புதனுடன் சேர்ந்து சிறப்புற சிவ பூஜை செய்தான். அங்கிருந்து தெற்கு நோக்கி வந்த தேவர்கோன் பெரிய மருதங்காட்டை அடைந்தான்.

    அங்கு தானாக பூமியில் இருந்து தோன்றியப் பெருமானைக் கண்டான். தீர்த்தம் அமைத்து, அந்த லிங்கத்திற்கு நாள்தோறும் நியமத்துடன் பூஜை செய்தான். இந்திராணி, வாசனை மலர்களை பறித்து, மாலையாக்கி, மருத வன ஈசனுக்கு சாற்றி மகிழ்ந்தாள். இவ்வாறு வழிபட்டு வரும் வேளையில், பார்வதி தேவியோடு சிவபெருமான் அங்கு தோன்றினார்.

    அவரிடம் இந்திரன், தனக்கு ஏற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷத்தையும், தேவையற்ற பயத்தையும் போக்கும்படி வேண்டினான். அப்படியே அருளிச் செய்தார், சிவபெருமான். பார்வதிதேவி விபூதி பிரசாதமும், தீர்த்த பிரசாதமும் வழங்கி இந்திரனை ஆசிர்வதித்தார்.

    அப்போது இந்திரன், இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அருள் வேண்டும் என்று வேண்டினான்.

    அன்னையும் அப்படியே அருள செய்தார். இத்தல இறைவன் `புரந்தரீசர்' என்றும், இந்திரனுக்கு பிரசாதம் அளித்ததால் அம்பிகை `இந்தரபிரசாதவல்லி' என்றும் பெயர் பெற்றனர். இந்திரன் அமைத்த தீர்த்தம் `இந்திர தீர்த்தம்' என்றும், இந்த இடம் `புரந்தரபுரி' என்றும் போற்றப்பட்டது.

    ஊரின் கிழக்குப் பகுதியில் சாலையை ஒட்டியபடியே அழகிய மூன்று நிலை கோபுரத்துடன் எழுந்து நிற்கிறது, இந்த ஆலயம். கோபுர வாசலின் உள்ளே நுழைந்ததும், தென்மேற்கு திசையில் தல கணபதியின் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. மேற்கில், சுவாமி சன்னிதியின் பின்புறமாக வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதி உள்ளது. கிழக்கு திசையில் கொடிமரம், நந்தி உள்ளனர்.

    அதன் அருகே தீப ஸ்தம்பம் ஒன்று அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் சுமார் நான்கடி உயர லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கின்றார், புரந்தரீசர்.

    இங்கு நந்திதேவருக்கு வலப்புறமாக இந்திரபிரசாதவல்லி, தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். அம்பாள் சன்னிதிக்கு எதிர்புறம் சுரங்கப்பாதை ஒன்றும் காணப்படுகிறது. ஈசான திக்கில் நவக்கிரகங்கள் மற்றும் சூரியன், கால பைரவர் வீற்றிருக்கின்றனர். வடபுறத்தில் மதில் சுவரின் உட்புறம் 63 நாயன்மார்களுக்கும் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு வாசல் ஒன்று இங்கே இருப்பது சிறப்பு.

    இந்த வாசல் வழியாக சென்றிட, ஆலயத் திருக்குளமான இந்திர தீர்த்தம் நாற்புறமும் படிகளுடன் அழகாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    மீண்டும் உள்ளே வந்தால், நந்திக்கு இடதுபுறம் தல விருட்சமான வில்வ மரமும், அதன் கீழே நாகர் சிலைகளும் காணப்படுகின்றன.

    பிணைந்த நாகங்களுக்கு இடையே கிருஷ்ணரும் காட்சி தருகின்றார். தென்முக வாசலில் 16 கால் மண்டபமும், அதன் தென்மேற்கில் தர்மசாஸ்தா சன்னிதியும் உள்ளது.

    இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. தவிர கந்தசஷ்டியில் சூரசம்ஹாரம், பங்குனியில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம், அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு போன்றவையும் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் சன்னிதியில் குங்கும பிரசாதமும், தை மாத வெள்ளிக்கிழமையில் தீர்த்த பிரசாதமும் தரப்படுகிறது. அம்பாளுக்கு அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இத்தலத்தில் உள்ள சூரியன் மற்றும் புரந்தரீசருக்கு கோதுமைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் நோய்கள் நிவர்த்தியாகும்.

    ராகு - கேது மற்றும் நாக தோஷத்தினால் துன்பப்படுபவர்கள், இணைந்த நாகங்களுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மருதாடு.

    Next Story
    ×