என் மலர்
வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம்
- சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காளஹஸ்தீஸ்வரருக்கு கொடியேற்றம் நடைபெற்றது. நுழைவுவாயில் அருகில் சுமார் 40 அடி உயரத்தில் கல்லால் ஆன கொடி மரமும், அதன் அருகில் குரு தட்சிணாமூர்த்திக்கு தங்கக்கொடி மரமும் உள்ளது. தங்கத் தகடு பொருத்தியுள்ள மற்றொரு காளஹஸ்தீஸ்வரர் கொடிமரமும் உள்ளது.
மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் கொடியேற்றத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக வேத பண்டிதர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரம் அருகில் பஞ்சமூர்த்திகளை அமர்த்தி சிறப்பு கலசங்களை ஏற்பாடு செய்தனர்.
அங்கு யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய புடவைகளை தர்ப்பை கயிறுடன் இணைத்து கொடியுடன் சேர்த்து வேத பண்டிதர்கள் ஏற்றினர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தம்பதியினர், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தம்பதியினர், ஆர்.டி.ஓ. ராமாராவ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






