search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
    X

    கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

    • 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது.
    • சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாள் உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. நாளை மறுநாள் 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும்.

    தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும்.


    அதையொட்டி, தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.

    இதில், மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் தீட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    மேலும், தீப கொப்பரையில் உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில், மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மலையில் தற்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால், தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறது.

    தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

    மாட வீதிகள், கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் தேர் திருவிழாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையொட்டி 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் தங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ஆட்டோக்கள் கட்டணங்கள் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் நிறுத்தவும் ஆங்காங்கே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே, வருகிற 13-ந் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.

    அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத் திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


    இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக வல்லுநர்குழு கள ஆய்வை தொடங்கினர்.

    இந்த குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக போலீசார், பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு, வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றனர்.

    மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர்.

    அதன் அடிப்படையில், மலையேற பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை 2 நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×