என் மலர்
வழிபாடு
மழை காரணமாக திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம் ரத்து: மாலையில் மகா தீபம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
- மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக சிறிய பல்லக்கில் சுவாமி ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக உற்சவர் சந்தையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சகடை தேரில் சுப்பிர மணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி ரத விதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை இருந்து நிபுணர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மலை மேல் 3½ அடி உயரம் 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் 100 மீட்டர் காடா துணி 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை, புதிய படிக்கட்டு பாதை, கோவில் வாசல்,பேருந்து நிலையம் என நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்து மீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.