என் மலர்
வழிபாடு
திருவண்ணாமலையில் மண்சரிவு: பக்தர்கள் மகா தீப மலையேற தடை
- எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.
- மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் புயல் மழை காரணமாக பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து மகா தீப மலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சி அருகிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மகாதீப தரிசனத்திற்காக ஆண்டு தோறும் 2500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டும் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
மகா தீப மலையில் பல இடங்களில் ஈரப்பதம் இருப்பதால் பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழு மூலமாக நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
மகா தீப மலையில் ஈரப்பதம் 900 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.
வழக்கம்போல் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப கொப்பரை, நெய், காடா துணி சுமார் 30 கிலோ கற்பூரம் போன்றவை எடுத்துச் செல்லப்படும். இதற்கு கோவில் ஊழியர்கள் மற்றும் மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மகாதீப தரிசனத்திற்கு 2500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை.
இது குறித்து விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.