search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலித்த பூரி ஜெகநாதர்: 15 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
    X

    பூரி ஜெகநாதர் தங்க அங்கி அலங்காரத்தில் எழுந்தருளியதையும், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதையும் படத்தில் காணலாம்.

    தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலித்த பூரி ஜெகநாதர்: 15 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

    • சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர்.
    • சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் படையெடுப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கு புதிய தேர்கள் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வர, தேரோட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ரா தேவிக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டன.

    இந்த புதிய தேர்களில் 10 நாள் நடைபெறும் தேரோட்ட திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேர்கள் குறிப்பிட்ட தூரம் இழுத்து செல்லப்படும். அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    ஜெகநாதரின் பிறப்பிடமாக கருதப்படும் ஸ்ரீ குண்டிச்சா கோவிலில் சுவாமி ஓய்வெடுப்பார். பின்னர் அங்கிருந்து தெய்வங்கள் திரும்பிய ஒரு நாளுக்கு பிறகு 'சுனா பெசா' எனப்படும் தங்க அங்கி அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னர், தென்னிந்திய மன்னர்களை தோற்கடித்து கொண்டுவந்த ஏராளமான நகைகளைக் கொண்டு, சுவாமிகளுக்கு தங்க உடைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னர் கபிலேந்திர டெப் காலத்தில் 1460-ம் ஆண்டு முதல் சுனா பெசா விழா கொண்டாடப்பட ஆரம்பித்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

    தேர் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. ஜெகநாதர், பலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் தங்க அங்கிகளில் தேரில் எழுந்தருளினர். இந்த தங்க அங்கிகளின் எடை 208 கிலோவாகும். மாலை 5.20 மணிக்கு தொடங்கிய தங்க அங்கி அலங்காரம் 6.10 வரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    சுவாமிகளின் தங்க அங்கி அலங்காரத்தை காண 15 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கூடி நின்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

    சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர். இது வீடு திரும்புதல் (நிலாத்திரி பிஜே) எனப்படுகிறது.

    தேரோட்ட திருவிழா சமயம் மட்டுமல்லாது தசரா, கார்த்திக் பூர்ணிமா மற்றும் தோலா பூர்ணிமா உள்ளிட்ட மேலும் 4 விழா காலத்திலும் பூரி ஜெகநாதர் ஆலய தெய்வங்களுக்கு தங்க அலங்காரம் செய்யப்படுகின்றன.

    Next Story
    ×