search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகாளயபட்சம்: மத்யாஷ்டமியில் முன்னோர் வழிபாடு முக்கியம்!
    X

    மகாளயபட்சம்: மத்யாஷ்டமியில் முன்னோர் வழிபாடு முக்கியம்!

    • மகாளயபட்ச காலத்தில் வரும் அஷ்டமி ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.
    • மறக்காமல் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

    மகாளயபட்ச காலத்தில் வரும் அஷ்டமி, ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தநாளில், மறக்காமல் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். முன்னுக்கு வரச்செய்வார்கள் முன்னோர்கள்.

    பட்சம் என்பது பதினைந்து நாட்கள். மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான பதினைந்துநாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமான நாள், அது முன்னோர்களுக்கான நாள்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். இந்த நன்னாளில் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோரை வணங்க வேண்டும் என்றும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் செய்து, ஆராதிக்கவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன. மாத அமாவாசை, தமிழ் மாத பிறப்பு, திவசம், கிரகண காலம் என்று உள்ளன. அதேபோல், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை என்பது மிக முக்கியமான அமாவாசைகள்.

    இந்த நாட்களில், முன்னோர் தர்ப்பணம் உள்ளிட்ட பித்ரு ஆராதனைகளை செய்யாவிட்டால், பித்ரு தோஷத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் பித்ரு தோஷத்துக்கு ஆளாவோம் என்கிறார்கள் ஆச்சாரியார்கள்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில், புரட்டாசி அமாவாசை என்பது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள், அதாவது பவுர்ணமியில் இருந்து வருகிற அடுத்த 15 நாட்கள், முன்னோர்களுக்கான நாட்கள். இந்த பதினைந்து நாட்களும் பித்ரு லோகத்தில் இருந்து, பூலோகத்துக்கு, நம் வீட்டுக்கு முன்னோர்கள் வருகிறார்கள். நம் ஆராதனைகளை பார்த்து மகிழ்கிறார்கள். மகிழ்ந்து ஆசி வழங்குகிறார்கள் என்பதாக ஐதீகம்.

    மகாளயபட்ச காலம் என்பது கடந்த செப்டம்பர் 2-ந் தேதியில் இருந்து தொடங்கியது. இது வருகிற அமாவாசை வரை இருக்கிறது. மகாளயபட்ச காலத்தில் பரணி நட்சத்திரம் இணைவது ரொம்பவே விசேஷம். இந்த நாளில், முன்னோர் ஆராதனை செய்வதும் அவர்களை நினைத்து தான தருமங்கள் செய்வதும் மிகுந்த புண்ணியம்.

    அதேபோல், பெளர்ணமியில் இருந்து அமாவாசை உள்ள காலத்துக்கு நடுவே, மகாளயபட்ச காலத்தில், அஷ்டமி திதி வரும். மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி, மத்யாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

    ஒரு ஊரின் மையப்பகுதி என்பது எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ, ஒரு கோவிலின் மையப்பகுதியில் முக்கியமான இறைவன் எப்படி குடிகொண்டிருக்கிறாரோ, மனித உடலின் மையப்பகுதியாக வயிறு எப்படி இருக்கிறதோ அதேபோல், மகாளயபட்ச காலத்தின் மையப்பகுதியாக, நடுநாளாக இருப்பது அஷ்டமி. அதனால்தான் மத்யாஷ்டமி என்று மகாளயபட்ச அஷ்டமியை போற்றுகிறது சாஸ்திரம்.

    மகாளயபட்சம் தொடங்கி தினமும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள், மறக்காமல் மத்தியாஷ்டமி அன்று முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அரிசி, வாழைக்காய், வெற்றிலை பாக்கு, தட்சணை கொடுக்கவேண்டும். ஒரேயொரு நபருக்காவது தயிர்சாதமோ, எலுமிச்சை சாதமோ, சாம்பார் சாதமோ வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் ஆச்சாரியார்கள்.

    வீட்டில் முதலில் விளக்கேற்றுங்கள், முன்னோர் படத்துக்கு பூக்கள் போடுங்கள், ஏதேனும் உணவிட்டு நைவேத்தியம் செய்யுங்கள், காகத்துக்கு உணவிடுங்கள், குடையோ செருப்போ போர்வையோ வஸ்திரமோ ஏதேனும் ஒன்று வழங்குவது உங்கள் வாழ்வையே மலரச்செய்யும். இந்த வழிபாடு செய்வதால் இதுவரை உள்ள தடைகள் அனைத்தையும் தகர்த்து முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். முன்னோர்களின் பரிபூரண ஆசியையும் பெறுவீர்கள்.

    Next Story
    ×