search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-5)
    X

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-5)

    • தூய்மையான மலர்கள் தூவி வணங்கி, புகழ் பாடி, மனதில் தியானிப்போம்.
    • மலை போன்ற தோற்றத்தை உடைய சிவ பெருமானை திருமாலும், பிரம்மனுமே அறிய முடியவில்லை.

    திருப்பாவை

    பாடல்:

    மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,

    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

    தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

    வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

    தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    மாயம் நிறைந்தவனும், வட மதுரையில் அவதரித்தவனும், தூய்மையான பெரிய யமுனை நதியில் விளையாடியவனும், இடையர் குலத்தில் தோன்றிய ரத்தின தீபம் போன்றவனும், தான் பிறந்த தேவகியின் வயிற்றிற்கு பெருமை சேர்த்து தாமோதரன் என்று பெயர் பெற்றவனை, தூய்மையான மலர்கள் தூவி வணங்கி, அவன் புகழ் பாடி, மனதில் தியானிப்போம். செய்த பாவங்களும், வந்து சேர இருக்கும் வினைகளும் தீயில் இட்ட பஞ்சு போல மறைந்து போகச் செய்யும் அவன் திருநாமங்களைச் சொல்வோம்.

    திருவெம்பாவை

    பாடல்:

    மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

    போலறிவோம் என்றுள்ள பொக்கங்களேபேசும்

    பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!

    ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

    கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்

    சீலமும் பாடிச் சிவனே! சிவனே! என்று

    ஓலம் இடினும் உணராய் உணராய்காண்!

    ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    நறுமணம் வீசும் பொருட்களைப் பூசிய மணம் வீசும் கூந்தலையுடைய பெண்ணே! மலை போன்ற தோற்றத்தை உடைய சிவ பெருமானை திருமாலும், பிரம்மனுமே அறிய முடியவில்லை. அப்படிப்பட்டவனை நாம் அறிவோமென்று நீ வேடிக்கையாகப் பேசுகிறாய். தேனும் பாலும் கலந்து வேடிக்கையாகப் பேசும் திறம் படைத்தவளே! வாசலைத் திறப்பாய். மண்ணும் விண்ணும், மற்ற எதனாலும் அறிந்து கொள்ள இயலாத தன்மையுடையவனும், நம்மை அருளால் சீராட்டுபவனுமாகிய இறைவனைப் பாடுகின்றோம். 'சிவனே! சிவனே' என்று அவனது பெயரை உரக்கக் கூவுகிறோம். அதை உணராமல் உறங்கும் நீ. எப்போது உணரப் போகிறாய்? எழுந்திடுவாய்!

    Next Story
    ×