என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/21/1795196-palani.jpg)
பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐப்பன் சீசன் தொடங்கியுள்ளது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இதேபோல் முகூர்த்தம், மாதப்பிறப்பு, கிருத்திகை, வாரவிடுமுறை உள்ளிட்ட நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐப்பன் சீசன் தொடங்கியுள்ளது. சபரிமலைக்கு சென்றுவிட்டு வரும் அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பழனியில் காலை, மாலை வேளையில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை, முகூர்த்தநாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர். அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில், அய்யம்புள்ளி ரோடு ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் கடும் கூட்டம் காணப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்தவகையில் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.