search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் படிப்பாதை, உப சன்னதிகளில் இன்று கும்பாபிஷேகம்
    X

    பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்ட காட்சி.

    பழனி முருகன் கோவிலில் படிப்பாதை, உப சன்னதிகளில் இன்று கும்பாபிஷேகம்

    • நாளை ராஜகோபுரத்தில் குடமுழுக்கு நடக்கிறது.
    • இன்று பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கி வருகின்றனர். நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பழனி கோவில் படிப்பாதை மற்றும் உபசன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காலை பாதவிநாயகர் கோவில், இடும்பன், கதம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலகர், சண்டிகாதேவி, விநாயகர், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, வேலாயுதசாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்குடஞானதிருவுலாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    பழனி மலைக்கோவிலில் ராஜகோபுரம் உள்பட பிற சன்னதிகளில் நாளை காலை 8 மணிமுதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை காண 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரமுடியாத பக்தர்கள் கீழே இருந்து கும்பாபிஷேகத்தை காண வசதியாக அடிவாரம், கிரிவீதிகள், பஸ்நிலையம் உள்பட 18 இடங்களில் அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மலைக்கோவிலில் கோபுர விமான தளத்திற்கு சென்று கும்பாபிஷேகத்தை பார்க்க முடியாதவர்கள் பிரகாரத்தில் இருந்தபடியே பார்க்கவும் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும், தைப்பூச விழாவை முன்னிட்டும் மதுரை-பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்றும், நாளையும், பிப்ரவரி 3,4,5-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி வந்து சேரும், மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரையை வந்து சேரும்.

    இந்த ரெயில் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்றுசெல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கண்ணன், கலெக்டர் விசாகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கும்பாபிஷேகத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோவில் மற்றும் பழனி நகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது, தற்காலிக பஸ்நிலையத்திலிருந்து இலவசமாக பஸ்களை இயக்குவது, டிரைவர்கள், கண்டக்டர்களை 3 சிப்டுகளாக பிரித்து இயக்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் இருக்கவும், பழனி அரசு தனியார் ஆஸ்பத்திரிகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கவும், ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், அடிவாரப்பகுதிகளில் போதுமான ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தினர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கு மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வழிகாட்டி பலகைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது.

    நகரில் சேரக்கூடிய குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பழனி பகுதியில் டிரோன்கள் பறக்க போலீசார் தடைவிதித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன், கோவில் இணைஆணையர் நடராஜன், சுதர்சன், பாரதி, சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×