என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி கோவிலில் கேரள பாரம்பரிய கட்டிடங்களை போன்று வேயப்பட்ட மேற்கூரைகள்
    X

    பழனி கோவிலில் கேரள பாரம்பரிய கட்டிடங்களை போன்று வேயப்பட்ட மேற்கூரைகள்

    • நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் 16 வருடங்களுக்கு பிறகு கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் பெரும்பாலான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை நேரடியாக காண முடியாமல் இணையதளம் மற்றும் எல்.இ.டி. திரை மூலம் கண்டுகளித்தனர். நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அடிவாரம், கிரிவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. தைப்பூசத் திருவிழா நெருங்கும் நாட்களில் மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்க குளிர்ச்சி தரும் மேற்கூரை வேயப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகத்துக்காக அவை அகற்றப்பட்டது. தற்போது கேரள கோவில்களிலும், கட்டிடங்களிலும் பாரம்பரிய முறையில் அமைக்கப்படும் கூரைகள் போல பழனி கோவிலிலும் பிரசாத ஸ்டால், அன்னதானக்கூடம் உள்ளிட்ட இடங்களில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற இடங்களிலும் இதே போன்று கூரைகள் வேயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பாபிஷேகம் முடிந்த நிலையிலும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×