என் மலர்
வழிபாடு
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம்
- சுவாமிக்கு விசேஷ சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.
- 2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பஞ்சமுக ஜெயமாருதி நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
1-ந்தேதி அதிகாலை மங்கள இசையுடன் விசேஷ பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்குக் காலை 5 மணி முதல் 7.30 மணிவரை சொர்ண ராம பாதுகை சிறப்பு தரிசனம் செய்ய பஞ்சமுக ஜெயமாருதி சேவா ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.
புதிய ரூபாய் நாணயங்களை மந்திர பூர்வமாகச் சுத்தம் செய்து சுவாமிக்கு விசேஷ சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.
பக்தர்களின் சேவைகளுக்கு ஏற்றாற் போல் அர்ச்சனை செய்யப்பட்ட நாணயம் மற்றும் பழங்களுடன் கூடிய பிரசாதம் வழங்கப்படும். 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியில் சுமார் 3 டன் பலவகையான பழங்களினால் பந்தல் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) எழுந்தருள் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், செயலாளர் எஸ்.நரசிம்மன், அறங்காவலர்கள் யுவராஜ், நடராஜன், செயலாளர் பழனிப்பன், செல்வம் மற்றும் கச்சபேஸ்வரன் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.