search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்

    • இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெரு விழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசித்தனர்.

    இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப்பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வரம் பிடித்து இழுத்து சுவா மியை தரிசனம் செய்தார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×