என் மலர்
வழிபாடு
நகரத்தார்களின் பெருமைகளை போற்றும் பிள்ளையார் நோன்பு
- சஷ்டி திதி சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
- 21 நூல்களை திரியாகத் திரித்து தீபம் ஏற்றினர்.
தொன்றுதொட்டு நகரத்தார் பிள்ளையார் நோன்பு நோற்று வருகின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய அடையாளங்களோடு சில விரதங்களையும் விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அப்படி குறிப்பிடத்தக்க ஒரு நோன்புதான் நகரத்தாரால் கொண்டாடப்படும்
பிள்ளையார் நோன்பு. கார்த்திகை மாதம் சஷ்டி திதி சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் இந்த நோன்பு தொடங்கி, சதய நட்சத்திரம் அன்று நிறைவுபெறும்.
இது குறித்த செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு. நகரத்தார்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகச் செல்வர்களாக விளங்கிய காலம். வியாபார விஷயமாக வணிகம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கார்த்திகை தீபம் அன்று அவர்களுடைய கப்பல் கடலில் புயலில் மாட்டிக் கொண்டது. தங்கள் குலதெய்வமான மரகதப் பிள்ளையாரை நினைத்து வேண்டினர். சூறாவளியில் சிக்கினாலும் எந்த ஆபத்தும் இன்றி கப்பல் அங்குமிங்கும் தடுமாறி 21 நாட்கள் கழித்து ஒரு தீவின் கரையை அடைந்தது.
அன்றைய தினம் சஷ்டி திதி சதய நட்சத்திரம். அங்கேயே அவர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் கொண்டு வந்திருந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலிய பொருள்களைக் கலந்து மாவுப் பிள்ளையார் பிடித்து, 21 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு ஒரு நூலாக 21 நூல்களை திரியாகத் திரித்து தீபம் ஏற்றினர்.
அதன் பிறகு சொந்த ஊர் அடைந்து தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி பிள்ளையாருக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு, இருபத்தோராம் நாள் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் கூடும் நாளில் ஆவாரம்பூ அரிசிமாவு பிள்ளையாரும் புத்தம்புது வேஷ்டியில் நூலில் செய்யப்பட்ட திரியையும் கொண்டு விளக்கு ஏற்றி வணங்குவார்கள். பிறகு, அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வார்கள்.