search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்
    X

    இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்

    • லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 9-ம் நாளான நேற்று பிட்டு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடந்தது. இதையொட்டி சுந்தரேசுவரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை அலங்காரத்தில் மீனாட்சியுடன் காட்சி அளித்தார். பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, பழைய சொக்கநாதர் கோவில், சிம்மக்கல் வழியாக பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் எழுந்தருளினார்கள்.

    அங்கு மதியம் 2.35 மணிக்கு மேல் பிட்டு மண் சுமந்த லீலை நடந்தது. அதில் சுந்தரேசுவரர் சுவாமியாக ராஜா பட்டரும், பாண்டிய மன்னராக ஹலாஸ் பட்டரும் பிட்டு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறவில்லை. எனவே நேற்று இறைவனை காணவும், அப்போது நடைபெறும் லீலையை காணவும் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி நேற்று களைகட்டி காணப்பட்டது. பின்னர் லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து மாலை சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி ஒர்க்‌ஷாப் ரோடு, வக்கீல் புதுத்தெரு, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக இரவு கோவிலை வந்தடைந்தனர். பிட்டு திருவிழா நடைபெறும் தினம் மதுரையில் மழை பெய்வது வழக்கம். அதே போன்று நேற்று மதியத்தில் இருந்து மழை பெய்தது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    திருவிழா நடைபெறும் வைகை ஆற்றின் கரை பகுதியில் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×