என் மலர்
வழிபாடு
வழிபாட்டுக்காக சதுரகிரி செல்ல திரண்ட பக்தர்கள்
- சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
- பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என வனத்துறையினர் கூறினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடை பகுதிகளில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும், கனமழை எச்சரிக்கையாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி வனத்துறை கேட்டின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என வனத்துறையினர் கூறினர்.
இதையடுத்து நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்ப சென்றனர். அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினார் செய்திருந்தனர்.