என் மலர்
வழிபாடு

வாகனம் ஒன்றுக்கு வர்ணம் பூசும் பணி, தரையில் ரங்கோலி கோலம் வரையும் பணி நடந்தபோது எடுத்தபடம்.
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பிரம்மோற்சவ விழா: சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க ஏற்பாடு
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
- தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
அதையொட்டி திரிநேத்ரா விருந்தினர் மாளிகையில் கோவில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது முக்கிய நிகழ்ச்சிகளாக ஆதி தம்பதிகளான சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், கிரிவலம், தேர்த்திருவிழா ஆகியவை நடக்கின்றன. அந்த நாட்களில் அதிக பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் துறையினர் ஒருங்கிணைந்து நகரம் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வாகன நிறுத்துமிடத்தில் அடிக்கடி கொசு மருந்து தெளிக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
திருக்கல்யாண உற்சவம் அன்று நகரம் மற்றும் கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடக்காமல் சமூக நலத்துறையினர், குழந்தைகள் நலத்துறையினர், போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பக்தர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தயார் நிலையில் 108 ஆம்புலன்சுகள் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசுகையில், வாகனச் சேவையின்போது நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி வி.சாகர்பாபு, திருப்பதி வருவாய் கோட்டாட்சியர் கனகநரசாரெட்டி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கோவிலின் 4 மாட வீதிகளில் ஊர்வலத்துக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கும், கோவில் கோபுரங்களுக்கும் வா்ணம் பூசும் பணி நடக்கிறது. பக்தர்களை கவரும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்படுகிறது. தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது. அந்தப் பணிகளை கோவில் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.






