search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு
    X

    வீட்டில் வைத்து வழிபட்ட முளைப்பாரியை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் கரைத்த பெண்கள்.

    தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு

    • தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.
    • இன்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல் ஆடி மாதத்தில் 18-ம் நாள் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.

    அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான இன்று 18 வகையான நைவேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடத்தினர்.

    நெல்லை குறுக்குத் துறை தாமிர பரணி ஆற்றங்கரையில் சுப்பிர மணிய சுவாமி கோவில் படித்துறையில் திரளான பெண்கள் இன்று காலை முதலே திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர். இன்று மாலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் முன்பு தொடங்கி சந்திப்பு கைலாசநாதர் கோவில் வரை ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    Next Story
    ×