என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள 12 கால் மண்டபம், சரபேஸ்வரர் வழிபாடு
- தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
- ஞான சம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபம் உள்ளன.
இந்த தஜாரோகண மண்டபத்தில்தான் அருள்தரும் கற்பகாம்பிகை நவராத்திரி கொலுவிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலாவுக்கு புறப்படுவதற்கு முன் இங்கு வைத்து தான் அலங்காரம் செய்கிறார்கள். மண்டபத்தை யொட்டி திருமுறை பாராயண அறையும் உள்ளன. இதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
வேத மண்டபம்
12 கால் மண்டபத்தின் அருகே 4 கால் தூணுடன் விளங்கும் வேத மண்டபத்தில்தான் விழாகாலங்களில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்டுவர்.
அருணகிரிநாதர்
இங்கு அருணகிரிநாதருக்கென்று தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அவரை ஆட்கொண்ட முருகனின் சன்னதிக்கு எதிரிலேயே கூப்பிய கரங்களுடன் இவரது சன்னிதியும் அமைந்துள்ளது சிறப்பு.
தங்கத்தேர் விசேஷ நாட்களில் உட்பிரகாரத்தில் உலா வரும் காட்சியைக் காண பேறு பெற்றிருக்க வேண்டும். விருப்பப்படும் பக்தர்கள் விசேஷ கட்டணம் செலுத்தி இறைவனை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரத்தில் வலம்வரச் செய்து நல்லாசி பெறுகின்றனர்.
திருக்குளம், நீராழி மண்டபம்
மேற்கு பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள மேலைக் கோபுரத்தின் வழியே வெளியில் சென்றால், கடல் போல் பரந்துள்ள திருக்குளம், கபாலீ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நடுவே அழகான நீராழி மண்டபம் உள்ளது. சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் இக்குளத்தின் மேற்கு கரையில் எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அதன் அருகில் ஜ்யேஷ்டா தேவியின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
குளத்தின் வடமேற்கு மூலையில் மூன்று கால் மண்டபமும் தென்கரையில் ஞான சம்பந்தருக்கு பங்குனி விழாவில் அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபமும் உள்ளன. கிழக்கே மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் நீராடும் மண்டபமும், வடக்கில் சிவலிங்க மண்டபமும் அமைந்துள்ளது.
இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் தைப்பூசத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முதல் நாள் சந்திசேகர சுவாமியும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலரும், தெப்பத்தில் எழுந்தருளுவார். முதல்நாள் ஐந்து சுற்று, இரண்டாவது நாள் ஏழு சுற்று, மூன்றாவது நாள் ஒன்பது சுற்று என மூன்று நாட்கள் தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.
தெப்பம் புறப்படுகையில் பெண்கள் வெற்றிலையில் கற்பூரமேற்றி தண்ணீரில் விடுகின்றனர். இத்திருக்குளத்தில் முழுகி பாவங்கள் களைந்தவர்கள் அனேகம். அவ்வாறே கலிங்கத்தை ஆண்ட தருமனின் புதல்வன் சாம்பன் என்பவனும் தனது பாவங்கள் தீர இக்குளத்தில் நீராடி கற்பகாம்பிகை, கபாலீஸ்வரரை வழிபட்டு முக்தியடைந்ததாக 'தீர்த்த சர்க்கம்' என்ற நூல் தெரிவிக்கிறது.
குளத்திற்கு எதிரே கோபுரத்தின் வடக்குப்புறத்தில் கற்பக விநாயகரையும், அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் பாலமுருகனும் நுழைவாயிலுக்கு எதிரே துவஜஸ்தம்பம் உயர்ந்து காட்சி தருகிறது. அதனருகே பலி பீடத்தையும், ரிஷப தேவரான நந்தியம் பெருமானையும், அடியார்க்கு அருள்புரிய வீற்றிருக்கும் விநாயகரையும் காணலாம்.
ஸ்ரீ கற்பகாம்பிகை சன்னதி
இங்கு அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறாள். சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. அதோடு வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி, நவராத்திரி காலங்களில் பூப்பாவாடை, தங்கக் காசுமாலை மற்றும் வைரக்கிளி தாடங்கமும் அணிந்து காட்சி கொடுக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளித் தொட்டிலில் அம்பாளை வைத்து வேத பாராயணம் ஒலிக்க மும்முறை வலம் வரும் அவளின் அழகைக்காண கண்கோடி வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சுக்ரவாரம் இந்த பவனியுடன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.
சன்னிதியின் தென்மேற்கில் இறைவனின் பள்ளியறை உள்ளது. பிராகார சுவர்களில் பாமாலைகளும், சவுந்தர்ய லஹரியும், அபிராமி அந்தாதியும் சலவைக் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்