search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சித்தரின் கை பட்டதும் நிலைக்கு வந்த தேர்!
    X

    சித்தரின் கை பட்டதும் நிலைக்கு வந்த தேர்!

    • சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.. என்று பாடினார்.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சுரண்டைக்குச் செல்லும் வழியில் உள்ளது, கீழப்பாவூர். இங்கு சிவலோக பண்டாரநாதர் என்ற சித்தர் கோவில் இருக்கிறது.

    பொதுவாக சித்தர்கள் ஜீவ சமாதியான இடத்தில் சிவலிங்கம்தான் பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் இங்கு, அந்த சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வாலயம் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் ஆனித் தேரோட்டம் மிகவும் முக்கியமானது. 500 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பிரமாண்டமாக நடைபெற்றுவரும் இந்த தேரோட்டம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சன்னியாசியால் தடைபட்டுப் போனது.

    அந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் காண வந்திருந்தனர். அவர்களில் நெல்லை அருகே உள்ள மானூரைச் சேர்ந்த சிவலோக பண்டாரநாதர் என்ற சன்னியாசியும் ஒருவர்.

    ஒல்லியான தேகம், நீண்ட தாடி, கையில் தவக்கோல், இடுப்பை மட்டுமே மறைக்கும் வஸ்திரம் என்று, முக்கால்வாசி நிர்வாணத்துடன் வந்திருந்த அவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கேலி- கிண்டல் செய்து அங்கிருந்து விரட்டினர். இதனால் வருத்தத்துடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    சிறிது நேரத்திலேயே ஒரு காளை மாட்டின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் அங்கு வந்தார். தேரின் முன்பாக சென்று நிதானமாக இறைவனை தரிசித்தார். அப்போது இளைஞர்கள் மீண்டும் அவரைப் பார்த்து கேலி- கிண்டல் செய்தனர். இதனால் வருந்திய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.

    அதன்பின்னர் அப்பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தும் தேர் சிறுதும் நகரவில்லை. 'தேரின் சக்கரத்தில் ஏதேனும் மாட்டிக் கொண்டு இருக்கிறதா?' என்று பார்த்தனர். அப்படியும் ஒன்றும் இல்லை.

    மீண்டும் சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போதும் தேர் நகரவில்லை. இறுதியில் பக்தர்கள் அனைவரும் சோர்ந்து போயினர். இப்படி நகராத தேர், சுமார் 2 மாதங்களாக நடு வீதியில் நின்று கொண்டிருந்தது.

    இதனால் வருந்திய கோவில் நிர்வாகத்தினர், தேர் நகராததற்கு தெய்வச் செயல் எதுவும் காரணமா என்று பிரசன்னம் பார்த்தனர். அப்போது கோவில் தேரோட்டம் தொடங்கிய நேரத்தில் ஒரு சன்னியாசியை இளைஞர்கள் கேலி செய்தது பற்றியும், அவர் ஒரு சித்தர் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

    அந்த சித்தரின் மனம் குளிர்ந்தால்தான், தேர் அங்கிருந்து நகரும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சித்தர், திருக்குற்றாலத்தில் இருப்பதை அறிந்து கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் சித்தர், வான் வழியாக பறந்து குருக்கள் மடம் என்ற பகுதியை அடைந்தார்.

    திருக்குற்றாலத்தில் சித்தர் இல்லாததால், மீண்டும் பிரசன்னம் பார்க்கப்பட்டு, அவர் குருக்கள் மடத்தில் இருப்பதை அறிந்தனர். பின்னர் அங்கு சென்ற கோவில் நிர்வாகத்தினர், இளைஞர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மீண்டும் தேர் ஓட அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர்.

    இதையடுத்து திருநெல்வேலி வந்த சிவலோக பண்டாரநாத சித்தர், "தேரோடும் வீதியிலே தெவங்கி நிற்கும் நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.." என்று பாடினார்.

    மறுநொடியே மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல, அந்த தேர் தானாகவே நகர்ந்து, கோவில் வளாகத்தில் போய் நிலை கொண்டது. இதைக்கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

    சிவலோக பண்டாரநாத சித்தர், தான் சித்ரா பவுர்ணமி அன்று ஜீவ சமாதி அடையப் போவதாகவும், பவுர்ணமி தோறும் தன் ஜீவசமாதியில் சாம்பார் சாதம், தயிர் சாதம் படைத்து வழிபட்டு, அதை தானமாக வழங்கு பவர்களுக்கு பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்று கூறினார். அதன்படியே அவர் ஒரு சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடத்தில் கற்கோவில் கட்டப்பட்டுள்ளது.

    கருவறையில் மூலவராக சிவலோக பண்டாரநாத சித்தர் திருவுருவம் உள்ளது. பத்மாசனத்தில் தியான நிலையில் வீற்றிருக்கும் இவர், தலையிலும், நெற்றியிலும் ருத்ராட்சம் அணிந்துள்ளார். அதோடு திருமார்பில் கவுரி சங்கரம் என்னும் அரிய ருத்ராட்சம், இரண்டு புஜங்களிலும் ருத்ராட்ச மணிகள், இடுப்பில் மட்டும் வஸ்திரம் என்று அணிந்திருக்கிறார்.

    வலது கையில் சின்முத்திரையோடும், இடக்கையில் ஏடு தாங்கியும், புத்தரைப் போல் நீண்ட காதுகளுடன், முகத்தில் புன்னகை தவழ சிவசிந்தனையுடன் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி வருகிறார்.

    சிவலோக பண்டாரநாதர், குருக்கள் மடம் பகுதியில் நோய் குணப்படுத்துவது, ஏடு ஜோதிடப் பலன் சொல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டார். இவரை அப்பகுதி மக்கள் 'ஏடு ஜோதிடர்' என்றே அழைத்தனர்.

    ஓய்வு நேரங்களில் அங்குள்ள தெப்பக்குளத்தில் நீரின் மேற்பரப்பில் படுத்து தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சித்தரின் புகழ், அனைத்து திசைகளிலும் பரவியது.

    தன்னை நாடி வருபவர்களிடம் தட்சணை எதுவும் பெறாமல், யாசகம் பெற்று கஞ்சி காய்ச்சி பருகி வந்தார். அந்த கஞ்சியை தன்னை நாடி வரும் மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும் வழங்கினார்.

    இப்படி கஞ்சியை பனை ஓலை பட்டையில் வாங்கிப் பருகிய மக்கள், ஓலை பட்டையை அங்கேயே வீசி விட்டுச் சென்றனர். அது காய்ந்து அருகில் இருக்கும் வீடுகளின் முன்பாக போய் விழுந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட அந்த வீட்டு மக்கள், சித்தரை வாய்க்கு வந்தபடி திட்டியதுடன், ஒரு கட்டத்தில் அவர் தங்கியிருந்த குடிலுக்கு தீயும் வைத்தனர்.

    ஆனால் அப்படி தீவைத்தவர்களின் உடல் வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்தது. உடல் முழுவதும் நெருப்பில் வெந்தது போல எரியத் தொடங்கியது. இதனால் பயந்து போன அவர்கள், சிவலோக பண்டாரநாத சித்தரைத் தேடி ஓடினர்.

    நீரின் மீது படுத்து தியானம் செய்து கொண்டிருந்த அவரிடம், தங்களின் செயலுக்கு மன்னிப்பு கோரினர். இதையடுத்து அவர்களின் உடல் சமநிலைக்கு வந்தது.

    சிவலோகநாதரை வழிபடுவோருக்கு குரு தோஷம், குரு சாபம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். அரசு வேலை, அரசியலில் உயர் பதவி கிடைக்க சிவலோக நாதரை தொடர்ந்து வழிபடுவது அவசியமாகும்.

    திருமணம், குழந்தைப்பேறுக்குரிய சிறப்புத்தலமாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. நோய் தீரவும், வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிபெறவும் இங்கு வழிபடுகிறார்கள். இங்கு அர்ச்சனை கிடையாது. அதனால் பூ மாலைகள், நல்லெண்ணெய், ஊதுபத்தி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள், பஞ்சாமிர்தம், அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது சிறப்பு.

    பவுர்ணமி தோறும் காலையில் சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை பூச நட்சத்திரம் அன்றும், அவரவர் பிறந்த நட்சத்திரம் அன்றும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    அமைவிடம்

    தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில், தென்காசியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோமீட்டரில் கீழப்பாவூர் இருக்கிறது. இங்கு வடக்குப் பேருந்து நிலையத்தில் அரசு நூலகத்தின் பின்புறம் 'குருக்கள் மடம்' பகுதியில் சிவலோக பண்டாரநாதர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

    Next Story
    ×