search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா
    X

    மயான பூஜையில் அம்மன் அருளாளி கையில் சூலாயுதம் ஏந்தி வாயில் எலும்பை கவ்வியபடி ஆடிய காட்சி.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா

    • செவ்வாய்க்கிழமை கொடி இறக்குதல், மகா முனி பூஜை நடக்கிறது.
    • 8-ந்தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நேற்று அதிகாலையில் ஆழியாற்றங்கரையில் நடந்தது.

    தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளி அருண் மற்றும் முறைதாரர்கள் திருஆபரண பெட்டியில் பூஜை பொருட்களை எடுத்து கொண்டு முன்செல்ல பக்தர்கள் படைசூழ மயான பூஜை நடக்கும் ஆழியாற்றங்கரைக்கு வந்தனர்.

    அங்கு மயான மண்ணில் சயன கோலத்தில் மாசாணியம்மன் உருவம் செய்யப்பட்டு, அதற்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதைதொடர்ந்து அம்மன் அருளாளி அருண் அருள் வந்து கையில் சூலாயுதத்துடன் ஆடினார். இந்த பூஜையின் போது மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடி அம்மனை தரிசித்தனர்.

    அம்மன் அருளாளி அருண் மயானத்தில் இருந்த அம்மன் உருவாரத்தை சிதைத்து எலும்பை கவ்வியபடி பிடிமண் எடுத்து அம்மன் பட்டு சேலையில் பத்திரப்படுத்தினார்.

    எலும்புகளை வாயில் கவ்வியபடி ஆழியாற்றங்கரையில் இருந்து உப்பாற்றங்கரைக்கு சென்றார். அவருடன் பக்தர்கள், முறைதார்களுடன் சென்று ஆற்றில் புனித நீராடினர்.

    தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மாசாணியம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 10.30 மணிக்கு மேல் சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்குகிறார்கள்.

    நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை ஆகியவை நடக்கிறது. 8-ந்தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×