search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திண்டல் முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு கயிறு கட்டி விரதம் கடைபிடிப்பு
    X

    திண்டல் முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு கயிறு கட்டி விரதம் கடைபிடிப்பு

    • நாளை காலை 9 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.
    • 30-ந்தேதி பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள்.

    ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்தன.

    கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலை படிக்கட்டு வழியாக ஏறி கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் தங்களது வலது கையில் காப்பு கயிறு கட்டிக்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார்கள். கோவிலின் பூசாரிகள் பக்தர்களுக்கு காப்பு கயிறு அணிவித்தனர். விழாவையொட்டி பக்தர்கள் 6 நாட்களுக்கு தொடர்ந்து விரதம் கடைபிடிப்பார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சடாஷர ஹோமமும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 31-ந் தேதி காலை 9 மணிக்கு வேலாயுதசாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படும். மேலும், பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இதேபோல் அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.

    Next Story
    ×