search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்றம்
    X

    எட்டுத்திக்கு கொடியேற்றம் நடந்தது. (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி)

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்றம்

    • வருகிற 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலையில் எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.25 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை சுவாமி, அம்மன் கேடயத்தில் புறப்பட்டு 4-ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், 20-ந்தேதி இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 21-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23-ந்தேதி நடைபெறுகிறது.

    விழாவின் 7-ம் நாளான 24-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகாரநந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 27-ந்தேதி வெள்ளை சாற்றி சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 8-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×