என் மலர்
வழிபாடு
தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
- திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேக விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
துாத்துக்குடியில் பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை சங்கரராமேஸ்வர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா விமரிசையாக நடக்கும்.
அதுபோல் இந்த ஆண்டும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கும்ப பூஜையும், 11மணிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.
பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுவாமி அன்னாபிஷேக அலங்காரத்திலலும், அம்பாள் புஷ்ப அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இரவு பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பவுர்ணமி பூஜை கமிட்டி நெல்லையப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.