search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி கர்ம பூஜை
    X

    கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி கர்ம பூஜை

    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
    • திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×