என் மலர்
வழிபாடு

பிரம்மோற்சவ விழா: கல்ப விருட்சம், அனுமன் வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா

- தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
- இன்று பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் அனுமன் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.