என் மலர்
வழிபாடு

பத்மாவதி தாயாருக்கு புஷ்பயாகம் செய்யப்பட்டிருந்த காட்சி.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 4 டன் மலர்களால் புஷ்ப யாகம்

- 12 வகையான பூக்கள், இலைகள் புஷ்ப யாகத்தில் பயன்படுத்தப்பட்டன.
- நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்று வந்த கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காலை 10.30 மணி முதல் 12 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதையொட்டி பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தேவஸ்தான தோட்டக்கலைத் துறைக்கு நன்கொடையாளர்கள் தமிழகத்தில் இருந்து 2½ டன் மலர்களும், ஆந்திரா,தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து 1½ டன் மலர்களும் வழங்கப்பட்டது. இந்த 4 டன் மலர்களால் பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
முன்னதாக மதியம் 1.30 மணிக்கு ஆஸ்தானமண்டபத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகள் வழியாக மலர்களை பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை புஷ்பயாகம் நடைபெற்றது.
சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லிகை, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, முல்லை, மனுசம்பங்கி, செண்டு, பவழப்பூக்கள், மருவம், தவனம், வில்வம் துளசி போன்ற இலைகள் உள்ளிட்ட 12 வகையான பூக்கள், இலைகள் புஷ்ப யாகத்தில் பயன்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.