search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் அங்கப்பிரதட்சணத்துக்காக பக்தர்கள் நீராட இரவில் புஷ்கரணி திறந்து வைக்க ஏற்பாடு
    X

    திருப்பதியில் அங்கப்பிரதட்சணத்துக்காக பக்தர்கள் நீராட இரவில் புஷ்கரணி திறந்து வைக்க ஏற்பாடு

    • அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம்.
    • உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

    பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதற்கு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி அளித்த பதில்களும் வருமாறு:-

    கோபிச்சாரி, குண்டூர்: திருப்பதி தேவஸ்தான இணையதளம் மற்றும் மொபைல் ஆப் பயன்பாடு நன்றாக உள்ளது. ஸ்ரீவாரி சேவைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது ப்ரொபைல் பைலாக வருகிறது. அதை சரி செய்ய வேண்டும்.

    அதிகாரி: நாங்கள் போன் செய்து விவரம் தெரிவிப்போம்.

    அபர்ணா, அனந்தபுரம்: அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 2 மட்டும் ஆன்லைனில் பதிவாகி வருகிறது. அதை 4 ஆக அதிகரிக்க வேண்டும்.

    அதிகாரி: ஒரு பக்தர் ஆன்லைனில் 2 அங்கப்பிரதட்சண டோக்கன்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த டோக்கன் பெற முடியாத பக்தர்கள் வேறு வழிகளில் தரிசனம் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20 வரை ஆர்ஜித சேவைகளின் லக்கி டிப்புக்கு பதிவு செய்யலாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை டிப் டிக்கெட் பெற்றவர்கள் பணத்தைச் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். பிற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 21-ந்தேதி வெளியாகிறது. ஸ்ரீவாணி, அங்கப்பிரதட்சண, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. அதேபோல் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 24-ந்தேதி, அறைகள் ஒதுக்கீடு 25-ந்தேதி வெளியிடப்படும். இதைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சீனிவாஸ், சிலக்கலூரிபேட்டை: கல்யாண உற்சவத்தில் குழந்தைகள் பங்கேற்க அனுமதிப்பார்களா?

    அதிகாரி: கல்யாண மண்டபத்தில் இடம் குறைவாக உள்ளதால் கோவிலில் அதிக மக்களை அனுமதிக்க வாய்ப்பில்லை. மைனர்கள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஜெயஸ்ரீ, ஐதராபாத்: மே மாதம் திருமலைக்கு வந்தோம். வெயிலின் வெப்பத்தால் சாலையில் நடந்தது சிரமமாக இருந்தது. தரை விரிப்புகள் போடுங்கள்.

    அதிகாரி: கோடையில் கோவில் தெருக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பகுதிகளில் குளிர்ச்சியாக இருக்க நாங்கள் கூல் பெயிண்ட் மற்றும் மேட்களை போடுகிறோம். அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகிறோம். ஏதேனும் பிழைகள் இருந்தால் சரி செய்யப்படும்.

    அசோக், சென்னை: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் நீராட புஷ்கரணிக்கு சென்றால், அங்கு இரவில் புஷ்கரணியை மூடி வைத்துள்ளனர். மேலும் திருமலை நம்பி கோவில் வாசலில் கேட் அமைத்துள்ளனர்.

    அதிகாரி: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இரவில் புஷ்கரணி திறந்து வைக்கப்படும். திருமலைநம்பி கோவில் வாசலில் உள்ள கேட் அகற்றப்பட்டு காவலர்கள் நிறுத்தப்படுவார்கள்.

    வெங்கட், காக்கிபாரா: லட்டு தரம் சரியில்லை. அன்னதானத்தில் அரிசியின் தரம் சரியில்லை.

    அதிகாரி: லட்டு தயாரிக்கும் தரமான மூலப்பொருட்களை டெண்டர் மூலம் வாங்கி வருகிறோம். சிறந்த தரத்துக்கான பரிந்துரைகளை போட்டு ஊழியர்களுக்கு வழங்குவோம். அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம். உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.

    மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    Next Story
    ×