search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது
    X

    சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடையுடன் எழுந்தருளி இருப்பதை படத்தில் காணலாம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது

    • வசந்த உற்சவம் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • 2-ந்தேதி சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடக்கும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்று அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

    வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி, சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி தருவார். அப்போது கோடை காலமாக இருப்பதால் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக அகழி வெட்டப்பட்டது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபத்தை நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

    மேலும் இந்த மண்டபத்தில் புராண கதைகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைத்த சிலைகள், எங்கும் காணமுடியாத சிவனின் திருவிளையாடல் புராணத்தை விளக்கும் சிலை வடிவங்கள், நாயக்கர் காலத்தை சிறப்பிக்கும் வகையில் செதுக்கப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. திருமலைநாயக்கர் காலத்தில் இருந்து வசந்த உற்சவம் இங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    திருவிழா நாட்களை தவிர இந்த மண்டபம் பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. பின்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தது. வணிக மண்டபமாக மாறியதால் அங்குள்ள சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது.

    எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

    பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். வருகிற 2-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். மேலும் மண்டபத்தை சுற்றி கடந்த ஆண்டு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் இந்தாண்டு மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பணிகள் நடப்பதால் தண்ணீர் நிரப்பப்பட வில்லை. மேலும் அரசு உத்தரவின்படி புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் அடுத்தாண்டு தண்ணீர் நிரப்பி திருவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×