search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது
    X

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது

    • முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
    • பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது.

    பொதுவாக பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாசுரத்துடன் தொடங்கும். ஸ்ரீரங்கத்தில் மட்டும் ஒரு நாள் முன்னர் திருநெடுந்தாண்டகம் சொல்லி விழா தொடங்கும்.

    திருநெடுந்தாண்டகம் திருமங்கை ஆழ்வாரால் தொடங்கப்பட்டது. அவரின் பாசுரங்களை அரங்கன் முதலில் கேட்க ஆசைப்பட்டார். பராசர பட்டர் மாதவன் என்ற ஜீயரை திருநெடுந்தாண்டகம் கொண்டு போட்டியில் வென்றார். அரங்கன் இந்த நிகழ்வை கேட்டு பராசர பட்டரிடம் அதை கொண்டே தொடங்க சொன்னதாக வரலாறு.



    வைகுண்ட ஏகாதசி பெருவிழா முழுவதுமே அரங்கனை தமிழால் பாடும் தமிழ் எழுச்சி விழா. நம்பெருமாள் முன்பாக பாசுரம் பாடுபவர்களை அரையர்கள் என்பார்கள். இவர்கள் ரங்கநாதர் முன்னர் திருநெடுந்தாண்டகம் 30 பாசுரங்கள் பாடுவர்.

    வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் நம்பெருமாள் முன்பாக பகல்பத்து மற்றும் ராப்பத்து என 21 நாட்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் அபிநயம் மற்றும் இசையுடன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிர திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருளுகின்றனர் என்பது ஐதீகம்.

    அதன்படி இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு அரையர்கள் திருநெடுந்தாண்டகம் பாட கோலாகலமாக வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து நாளை பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைகிறார். காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.

    இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர், முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

    பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வருகிற 9-ந் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார். மறுநாள் 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ராப்பத்து உற்சவம் நடைபெறும் 11-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை (8-ம் திருநாளான 17-ந் தேதி தவிர) சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    16-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந் தேதி தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம், மணல் வெளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, கோவில் கோபுரங்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில், கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×