search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முதன் முதலாக பனைமரம் பொறித்த பொற்காசுகளை வெளியிட்ட வெங்கலராஜனின் வீரவரலாறு
    X

    முதன் முதலாக பனைமரம் பொறித்த பொற்காசுகளை வெளியிட்ட வெங்கலராஜனின் வீரவரலாறு

    • வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது.
    • முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன்

    முதலில் வனங்களில் சுற்றித்திரிந்த மனிதன், பின்னாளில் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்களுக்கு ஒருவரை தலைவனாக நியமித்தான். இப்படி தொடங்கியதுதான் மன்னராட்சி முறை.

    சமவெளிகளுக்கு வந்த மனிதர்களை கட்டிக்காக்கும் பொறுப்பு அன்றைய காலகட்டத்தில் மன்னர்களுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சி பொறுப்பை பார்த்ததோடு, எதிரி நாட்டு மன்னர்களிடம் இருந்து தங்களது மக்களை பாதுகாக்க பல்வேறு படைபிரிவுகளோடு வசித்து வந்தனர்.

    அதுமட்டுமின்றி அரசர்கள் தாங்கள் குடும்பத்துடன் வசிக்க பிரமாண்ட அரண்மனைகளை கட்டினர். அப்படி கட்டப்பட்ட அற்புதமான ஒரு அரண்மனை குமரி மாவட்டத்தில் இன்றைய மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்தது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். அது வெங்கல கோட்டை என்று அழைக்கப்பட்டது. அந்த கோட்டையில் இருந்து ஆட்சி செய்து வந்த அரசன்தான் வெங்கலராஜன்.

    தற்போது வெங்கலராஜபுரம் என்று அழைக்கப்படும் முறம்பில் அரண்மனை அமைத்து ஆண்ட குறுநில மன்னன் வெங்கலராஜன். இலங்கையில் உள்ள குறுங்கடல் சூழ்ந்த புத்தளம் என்கிற குறுநாட்டில் வீரசேகர சோழனுக்கும் தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். 1525-ம் ஆண்டு (ஆங்கில ஆண்டு) பிறந்துள்ளார். அதாவது ஆவணி மாதம் 1-ந் தேதி பிறந்துள்ளார்.

    கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கிய வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது. அதாவது இரும்பின் மேல் பச்சிலை மூலிகையை தடவி அதை தங்கமாக்கும் வித்தை அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

    இலங்கையின் கண்டி மன்னனின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட புத்தளம் என்னும் குறுநிலப்பகுதியை வெங்கலராஜன் ஆட்சி செய்தான். முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன் இவர் தான். இலங்கை மண்ணில் மணமுடித்த வெங்கலராஜனுக்கு துறைமுகத்தழகி, சங்குமுகத்தழகி என்று 2 மகள்கள் பிறந்தனர். இருவரும் கல்வியிலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

    அழகிலும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பொலிவுடன் காணப்பட்டனர். தந்தை வீரசேகரசோழன் காலமான பின்பு வெங்கல ராஜனுக்கு பல்வேறு வழிகளில் தொல்லைகள் வந்து சேர்ந்தன. குறிப்பாக வட இந்தியாவில் இருக்கும் இன்றைய ஒடிசா கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாலும், ஆந்திர மன்னர்களாலும் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் வட இலங்கையின் செல்வ வளங்களை கவர்ந்து செல்ல முனைந்தது. புத்தளம் என்னும் குறுநிலத்தை ஆண்டு வந்த வெங்கலராஜனிடம் தங்கப் பாளங்களும், நகைகளும் இருப்பதை அறிந்த போர்ச்சுக்கீசியர்கள், வெங்கலராஜனுக்கு தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினர்.

    வெங்கல ராஜனிடம் இருந்த செல்வமே அவனுக்கு எமனாக வந்தது. இதனால் தன் வம்சத்தை தன்னோடு அழிந்து போக விடாமல் தடுக்கவும், தலைமுறையை காத்திடவும் நினைத்தான். இதனால் குமரி நாட்டுக்கு வர பெரிய தோணி ஒன்றில் பொன்னையும், பொருட்களையும் ஏற்றினான். இன்னொரு தோணியில் வித்தகர்களையும், கலைஞர்களையும், வைத்தியர்களையும், அண்ணாவிகளையும், கொல்லர், பொற்கொல்லர்களையும், நிர்வாக அமைச்சர்களையும் ஏற்றினான். மூன்றாம் தோணியில் குடும்பத்தார்களையும் ஆவணங்களையும் ஏற்றினான்.

    அந்த தோணிகள் இலங்கை புத்தளத்தில் இருந்து புறப்பட்டு தென்குமரியை வந்தடைந்தன. இப்போதைய மணக்குடிக்கு வந்த அவர்கள் பாசறையையும், காயலுக்கு கிழக்கே கன்னியாகுமரி சாலையில் உள்ள முறம்பில் அரண்மனையையும், குடியிருப்பையும் அமைத்தனர்.

    முகிலன் தலைமையில் உள்ள ஆட்சியாளர்கள் தங்குவதற்கு ஒரு குடியிருப்பை நிறுவி அவர்களை அங்கே தங்க வைத்தான். இன்றும் அந்த இடம் முகிலன்குடியிருப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. வெங்கலக் கதவுடன் அரண்மனை கட்டி ஆண்டதால் இன்றும் அந்த இடம் வெங்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது. பத்திரப் பதிவுகளிலும் வெண்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது.

    இப்போது இருக்கும் தலக்குளத்திற்கு அன்றைய பெயர் வாட்டக்களி பெரியகுளம் ஆகும். இன்றும் அரசு ஆவணங்களில் இந்த பெயரே உள்ளது.

    வெங்கலராஜனின் 2 மகள்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தனர். தன் மகள்கள் வளர வளர வெங்கலராஜன் மனதில் பயமும் வளர தொடங்கியது. அழகே ஆபத்தாகி விடுமோ? என்று அஞ்சினான். ஆகவே தன் மகள்கள் இருவரிடமும் தன்னுடைய அனுமதி இன்றி புதிய இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும், குறிப்பாக கோட்டையை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் கட்டளையிட்டான்.

    இதற்கிடையேல் வெங்கலராஜன் அரண்மனை, அதைச் சுற்றிலும் குடியிருப்புகள், அகன்ற வீதிகள் கட்டி முடித்தான். தொடர்ந்து கோட்டை ஒன்றை கட்ட விரும்பினான். இதற்கு நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டனர். அவனது முன்னோர்கள் ஆண்ட குரும்பூர் பகுதியில் அறிமுகமான பலர் வாழ்ந்து வந்தனர். எனவே அங்கு சென்று கோட்டை கட்ட தேவையான ஆட்களை கொண்டு வர வேண்டும் என்று தன் பரிவாரங்களோடு குரும்பூருக்கு சென்றார்.

    இன்றைய பறக்கையில் அப்போது பட்சி ராஜா கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவில் திருவிழா மிகவும் பிரபலமானதாக இருந்தது. அந்த விழாவுக்கு தந்தையின் கட்டளையை மீறி துறைமுகத்தழகியும், சங்கு முகத்தழகியும் சென்றனர். அதுவே பின்னால் சோதனை காலமாக அமையும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    விழாவுக்கு வந்திருந்த வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன், இருவரின் அழகைக் கண்டு மனம் மயங்கினான். இதில் அழகுக்கு அழகு சேர்க்கும் பதுமைபோல ஜொலித்த துறைமுகத்தழகியை எப்படியும் அடைய வேண்டும் என்று மனதுக்குள் மன்மத கோட்டையையே கட்டினான். திருவிழா முடிந்து சகோதரிகள் 2 பேரும் அரண்மனை திரும்பினர்.

    அதே சமயத்தில் கோட்டை கட்டும் பணியாளர்களை அழைத்து வருவதற்காக குரும்பூர் சென்ற வெங்கலராஜனும் அரண்மனை திரும்பினான். அப்போது ஓலையோடு வஞ்சி நாட்டு ஒற்றன் ஒருவன் வந்தான். அவனிடம் இருந்த ஓலையை வாங்கி வெங்கலராஜன் படித்து பார்த்த போது, அந்த சொற்கள் அவனை சுட்டு சாம்பலாக்கின.

    தான் குரும்பூர் சென்றபோது தன் மகள்கள் இருவரும் கோட்டைக்குள்தான் இருந்தார்களா? என்பதை தன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்தான். மகள்கள் இருவரையும் அழைத்து 'நான் இல்லாத போது என் அனுமதி பெறாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்' என்று கேட்டான். அதற்கு அவர்கள் இருவரும், 'பறக்கை பட்சிராஜா கோவிலில் நடைபெற்ற ஆராட்டு விழாவுக்கு சென்றோம், தங்களை மன்னியுங்கள்' என்றனர்.

    வஞ்சி நாட்டு ஒற்றன் கொண்டு வந்த ஓலையில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று எண்ணி தந்தையை பார்த்தனர் மகள்கள். வெங்கல ராஜன் ஓலையை தன் மகள்களிடம் கொடுத்து, படித்துப் பாருங்கள் என்றான்.

    ஓலையின் வாசகம் இதுதான், 'வெங்கல ராஜனுக்கு வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன் எழுதிக் கொள்வது. உன் மகள்கள் இருவரின் அழகிலும் நான் பெரிதும் மயங்கி நிற்கின்றேன். அதிலும் குறிப்பாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை அடைய வேண்டும் என்ற ஆசை என்னை வெகு தூரத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஆகவே உடனடியாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை என் அந்தப்புரத்திற்கு அனுப்பி வை' என்று எழுதப்பட்டு இருந்தது.

    மடலை படித்து முடித்த துறைமுகத்தழகியின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. ஆராட்டு விழா சென்று அகப்பட்டோம் என்று நினைத்து மனம் வருந்தினாள். தந்தை தன் மகளின் கண்ணீரை பார்த்து மனம் வருந்தினார்.

    ஓலையை கொண்டு வந்த ஒற்றனை அழைத்த வெங்கல ராஜன், 'என் மகளை வஞ்சி நாட்டு இளவரசனின் அந்தப்புர அழகியாக அனுப்பி வைக்க முடியாது என்று சொல் போ' என்று கூறி அனுப்பி வைத்தான்.

    காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. குரும்பூர் நகரில் இருந்து கூட்டி வந்த பணியாட்கள் கடற்கரையில் இருந்து பொற்றையடி வரை உள்ள நிலப்பரப்பை வரையறை செய்து கோட்டை கட்டத் தொடங்கினர். இருபுறமும் இருந்து மணலை எடுத்து முதலில் கோட்டை அமைப்பை உருவாக்கினர்.

    கடற்கரையில் கற்களை கொண்டும், சுண்ணாம்பு சுதை கொண்டும் கோட்டை கட்டும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    ஒரு நாள் காலையில் ரவிவர்மன் தன் படைகளோடு கோட்டையை சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கினான். அப்போது வெங்கல ராஜன் அஞ்சி ஓட மனமின்றி கோட்டைக்குள் இருந்தபடியே தன் குடிகளையும் உள்ளே அமர வைத்து வெண்கல கதவினை உள்ளிருந்தபடியே பூட்டிக் கொண்டான்.

    வெங்கலராஜன் உள்ளிருந்தபடியே, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த வஞ்சி நாட்டு வீரர்களை கவனித்துக் கொண்டிருந்தான். கோட்டை கதவும் திறக்கவில்லை, வஞ்சிநாட்டு வீரர்களும் அகன்று போகவில்லை. போரும் நடக்கவில்லை. ஏன் என்றால் துறைமுகத்தழகியை உயிரோடு அழைத்துப் போக வேண்டும் என்பதே படைக்கு இடப்பட்ட கட்டளை. இதனை காப்பாற்ற வீரர்கள் பலநாட்களாக கோட்டையை சுற்றிலும் நின்றனர்.

    திடீரென்று ஒரு நாள் போர்பறை ஒலித்தது. பொறுத்தது போதும் எழுந்து போருக்கு புறப்படுங்கள் என்பது இதன் பொருளாகும். இதனை அறிந்த வெங்கலராஜனும், ஆசை மகள்களும் மிகவும் துயரப்பட்டனர். தன் தந்தையின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட துறைமுகத்தழகி மனம் வருந்தினாள்.

    வெங்கல ராஜனோ தன் மகளை வஞ்சி மன்னன் விரும்பும் படியாக அனுப்புவதற்கு தயாராக இல்லை. துறைமுகத்தழகி தனது தந்தையிடம் வந்து, 'ஒரு மாபெரும் வீரன் நீங்கள். வீரனுக்கு அழகு விவேகம். தாங்கள் என் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே தூக்கி எறியுங்கள். அதனை பார்த்து வஞ்சி மன்னன் அஞ்சி ஓடுவான்' என்று தைரியமாக தந்தையிடம் கூறினாள்.

    எண்ணற்ற கேள்விகளுக்கு இடையே ஒரு முடிவோடு வாளை எடுத்த வெங்கல ராஜன் தன் மகளை வெட்டி தலையை தூக்கி கோட்டைக்கு வெளியே எறிந்தான். வருவாள் என்று எண்ணி மகிழ்ந்து நின்ற வஞ்சி நாட்டு மன்னன் கைகளில் தலை ஒன்று விழுவதைக் கண்டு தலைதெறிக்க ஓடினான். கண்ணியத்தையும், தான் விரும்பும் கற்பையும் காத்து நிற்க வேண்டும் என்கிற உணர்வு உடைய பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன் என்று புலம்பிக்கொண்டே தன் படைகளோடு அஞ்சி விடைபெற்றான் வஞ்சி மன்னன்.

    பின்னர் வெங்கலக்கோட்டை கதவு திறந்து மக்களும், மன்னனும் தன் இளவரசியின் தலையை தூக்கி வைத்து அழுது புலம்பினர். பின்னர் வெங்கலராஜன், மகளின் உடலையும், தலையையும் கொண்டு சென்று சந்தனக் கட்டைகளை அடுக்கி அதன் மேல் வைத்து எரியூட்டி காடாற்றி முடித்தான். இன்றும் இந்த பகுதிக்கு காடேற்றி என்னும் பெயரே நிலைத்திருக்கிறது.

    பின்னர் மகள் இறந்த துக்கம் தாளாமல் வெங்கலராஜனும் தனது மார்பில் வாளை பாய்ச்சி உயிர் துறந்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு நாள் இரவு 60 அடி உயரத்துக்கு அரபிக்கடல் ஆர்ப்பரித்து எழுந்து உலகையே விழுங்க வந்தது. இன்று சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தால் அரண்மனையும், கோட்டையும் குடிகள் வாழ்ந்த வீடுகளும் அழிந்து முடிந்தது.

    மன்னன் வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் நீலம் மதுமயன், இந்த மன்னன் வெங்கல ராஜன் அறக்கட்டளையை சுமார் 10 ஆண்டுகளாக வெங்கல ராஜபுரம் (கோவில்விளை) என்னும் முகவரியில் நடத்தி வருகிறோம். இந்த அறக்கட்டளையின் நோக்கம் மன்னன் வெங்கல ராஜனின் புகழைப் பரப்புவது ஆகும். அவரைப்பற்றி அறியாதவர்கள் மத்தியில் அவரது பெருமைகளையும், வரலாற்றையும் தெரியப்படுத்துவதை பணியாக செய்து வருகிறோம்.

    Next Story
    ×