என் மலர்
வழிபாடு
ஞான முதல்வர்..! விநாயகர்..!
- விநாயகப் பெருமானை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
- விநாயகரை தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும்.
எல்லா சுப நிகழ்வுகளுக்கும் முன் நின்று நிறைவாய் நடத்தி தரும் விநாயகப் பெருமாளின் நேர்மறை சக்தியை உணராதவர்கள் உண்டோ! துதிக்கையோடு ஐந்து கரத்தனை உடையவரும் மிக்க பலம் பொருந்தியவர் என்பதன் குறியீடாக யானை முகத்தை பெற்றவரும், இளம் பிறை சந்திரனைப் போன்ற அழகான தந்தத்தை உடையவரும், அன்பே வடிவமான சிவபெருமானின் மூத்த குமாரரும் ஞானத்தின் தெளிவாய் விளங்குபவரும் ஆன விநாயகரின் திருவடிகளை போற்றி அவரை நம் உள்ளத்தில் வைத்து வணங்குவோம்.
நம்முடைய தினப்படி வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நேர்மறை சிந்தனை இருப்பின் நேர்மறையான எண்ணங்களே உதிக்கும். நேர்மறையான எண்ணங்கள் உதிக்கின்ற பட்சத்தில் தூய்மையான குண நலன்களுக்கு வழிவகுக்கும் அவை நல்ல செயல்களை மேற்கொள்ள நம்மை வழிநடத்தும். விநாயகரை துதிப்பது மேற்படி தூய்மையான நேர்மையான சூழல் நிலவவும், வாழ்வை ஒவ்வொரு கணமும் நாம் இனிமையாக அனுபவித்து வாழவும் தான்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விநாயகப் பெருமானை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஞானத்தின் சிகரமாக அவரை கருதப்பட்டாலும் பக்தி மார்க்கத்தில் உருவ வழிபாட்டில் விநாயகரையே எல்லா இடங்களிலும் நாம் முன்னிறுத்துகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றே கவனித்தால் எல்லா விழாக்களுக்கும் முத்தாய்ப்பாய் விளங்குவது விநாயகர் சதுர்த்தி தான். இந்தியா முழுவதும் ஏன் தற்போது உலகெங்கிலும் கொண்டாடப்படும் விழாவாக இருப்பது மகிழ்வுக்கு உரியது.
விநாயகர் சதுரத்தி கொண்டாட்டம் அவரவர் குடும்ப வழக்கப்படி 1,3,5,7,9 மற்றும் 11 நாட்கள் என கொண்டாடப்படும். முதல் நாள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து பூ மற்றும் மாலை அணிவித்து அலங்காரம் செய்வதோடு தம் வீடுகளை பூ மற்றும் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள். உறவினர் மற்றும் நண்பர்களை வீட்டிற்க்கு அழைத்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.