என் மலர்
வழிபாடு
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது
- இன்று காப்பு கட்டும் உற்சவம் நடக்கிறது.
- 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கிராம தேவதைகளான அய்யனார் மற்றும் செல்லியம்மன் சாமிகளுக்கு காப்பு கட்டும் உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 9 மணி அளவில் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.
விழாவில் வருகிற 3-ந்தேதி தேரோட்டமும், 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி 4-ந்தேதி அதிகாலையில் உற்சவமூர்த்திகள் விருத்தாசலம் திருமுதுகுன்றத்தில் எழுந்தருள உள்ளனர். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
பின்னர் மாலையில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியும், அதைத்தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் பழனியம்மாள், சரக ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.