search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சித்தர்கள் என்பவர்கள் யார்? அஷ்டமா சித்திகள் என்பது என்ன?
    X

    சித்தர்கள் என்பவர்கள் யார்? அஷ்டமா சித்திகள் என்பது என்ன?

    • சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள்.
    • சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள்.

    சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.


    உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.

    சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.

    தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள்.

    அஷ்டமா சித்திகள்:

    அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அட்டாங்க யோகம் என்னும் எட்டு வகையான யோக நெறிகளை பற்றி வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவை முறையே:

    1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா

    அணிமா:

    அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலவும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்

    மகிமா :

    மலையினும் பெரிய உருவம் தாங்கி நிற்கும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்.

    லகிமா:

    உடலைப் பாரமில்லாமல் லேசாகச் செய்து நீர், சேறு முதலியவற்றில் அழுந்திவிடாமல் காற்றைப் போல விரைந்து செல்லும் வல்லமை இந்த சித்தியினால் ஏற்படும்.

    பிரார்த்தி:

    நாம் விரும்புவனவற்றையும் நினைப்பவற்றையும் உடனே அவ்வாறே அடையும் வல்லமையைத் தருவது இந்த சித்தி.

    பிரகாமியம்:

    தம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலைத் தருவது இந்த சித்தி.

    ஈசத்துவம்:

    அனைவரும் தம்மை வணங்கும்படியான தெய்வத் தன்மையை எய்தும்படிச் செய்வது இந்த சித்தி.

    வாசித்துவம்:

    உலகம் அனைத்தையும் தம் வயப்படுத்தி நடத்தும் ஆற்றலை பெற்றிருக்கச் செய்யும் இந்த சித்தி.

    கரிமா:

    ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் அவைகளுடன் சம்பந்தப் படாமலும் இருக்கும் வல்லமையை அளிக்கும் இந்த சித்தி.

    Next Story
    ×