என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தலையங்கம்
மின் அழுத்தத்தை போல் கட்டணமும் சீராக வேண்டும்
- 100 யூனிட் வரை இலவசம் என்பது மிகவும் குக்கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நிச்சயம் உதவும்.
- நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு, நகரச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்சார பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கும்.
உயர் அழுத்தம்...
மின்சாரத்திலும் இருக்கிறது. மின்சார கட்டண உயர்விலும் இருக்கிறது.
தமிழக அரசு மின்சார கட்டணத்தை சற்று உயர்த்தியது உயர் மின் அழுத்தத்தை போல மக்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எட்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்வாரியம் கடனில் தவிக்கிறது. எனவே மின் கட்டணத்தை உயர்த்துங்கள் என்ற அழுத்தம் அரசுக்கு... அரசும் உயர்த்தி விட்டது. இருக்கிற சூழ்நிலையில் இந்த உயர்வு எங்களுக்கு கூடுதல் அழுத்தமாகவே மாறும் என்பது மின் நுகர்வோர்களாக இருக்கும் மொத்த தமிழக மக்களின் ஆதங்கம்.
இந்த சூழ்நிலையில் குஜராத்தை விட குறைவு, கர்நாடகத்தை விட குறைவு என்று அரசியல் ரீதியாக அணுகி நியாயப்படுத்துவது சரியாக இருக்காது. ஏற்கனவே சுமந்து பழக்கப்பட்ட கழுதைக்கு கொஞ்சம் சுமையை கூடுதலாக ஏற்றி வைத்தாலும், அது சமாளித்து நடக்கும். பழக்கம் இல்லாவிட்டால் சற்று சுமை அதிகரித்தாலும் தடுமாறத்தான் செய்யும். அதே நிலைமைதான் இதுவும். இது மக்கள் செய்த தவறு ஆகாது.
100 யூனிட் வரை இலவசம் என்பது மிகவும் குக்கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நிச்சயம் உதவும். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வாழும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கூட ஆண்டில் ஆறு மாதங்கள் வரை சராசரியாக ரூ. 4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு கட்டணத்தில் 500 ரூபாய் கூடுவது என்பது எவ்வளவு பெரிய சுமையாக தெரியும்? ஏனெனில் இந்த வர்க்கத்தினர் பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தி சமாளித்துக் கொண்டிருப்பவர்கள்.
இந்த கட்டண உயர்வு மின்வாரியத்தோடு நின்று விடாது. இனி வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். ஏற்கனவே யூனிட்டுக்கு அரசு கட்டணம் ஒருவகையாக இருக்கும், வீட்டு உரிமையாளர்கள் வசூலிப்பது வேறு வகையாக இருக்கும். அந்த அடிப்படையில் இன்னும் கட்டணத்தை உயர்த்துவார்கள்.
200 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்துபவர்கள் சாதாரணமானவர்கள். அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் வசதி படைத்தவர்கள் என்று கணக்கிட்டு விட முடியாது, ஏனெனில் சென்னை போன்ற நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு, நகரச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்சார பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கும்.
ஆனால் மின் கட்டணத்தை பொறுத்தவரை யூனிட் பயன்படுத்துவதை பொருத்து கட்டணமும் மாறுபடுவது ஒரு பக்கம். தற்போது இந்த கூடுதல் கட்டணம் ஒரு பக்கம் என்பது அவர்களுக்கு கூடுதல் அழுத்தமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே தான் கூட்டணி கட்சிகளும் இந்த விஷயத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளன.
மின்வாரிய கருத்துக் கூட்டங்களிலும் சரி பொதுவாகவே மின் பயன்பாட்டை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடுவதை கைவிட்டு மாதம்தோறும் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் யூனிட்டுகள் அதிகரிக்கும் போது கட்டணங்களும் இரண்டு மடங்காகி விடுகிறது.
குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை மின் பயன்பாட்டை கணக்கிட்டாலாவது மக்களுக்கு இந்த அழுத்தம் பெரும் பிரச்சினையாக தெரியாது. இந்த மாதிரி செய்தால் எந்த அழுத்தத்தையும் தாங்கும் மனநிலைக்கு மக்களும் வருவார்கள்.
மின்வாரியம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், எல்லா தரப்பு மக்களுக்கும் ஒரே சீரான மின்சாரத்தை போல, சீரான மின் கட்டணமும் இருக்கும் என்று கருதுகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்